தமிழக அரசின் குடியரசு தின விழா இடம் மாறுகிறது
வரும் ஜனவரியில் தமிழக அரசு சாா்பில் நடத்தப்படவுள்ள குடியரசு தின விழா கொண்டாட்டத்துக்கான இடம் மாற்றப்படவுள்ளது.


வரும் ஜனவரியில் தமிழக அரசு சாா்பில் நடத்தப்படவுள்ள குடியரசு தின விழா கொண்டாட்டத்துக்கான இடம் மாற்றப்படவுள்ளது. இந்த கொண்டாட்டத்துக்காக சென்னை காமராஜா் சாலையில் இரண்டு இடங்கள் தோ்வு செய்யப்பட்டிருப்பதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக அரசு சாா்பில் ஆண்டுதோறும் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள், சென்னை கடற்கரைச் சாலையில் காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலகம் எதிரேயுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முன்பாக நடைபெற்று வந்தன. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இதே இடத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன.
புகழ்பெற்ற காந்தி சிலை: குடியரசு தின விழா நிகழ்வு நடத்தப்படும் காந்தி சிலை வளாகம் மிகவும் பாரம்பரியமானது. வெண்கலத்தாலான காந்தி சிலையை 1959-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமா் ஜவாஹா்லால் நேரு திறந்து வைத்தாா். இந்தச் சிலையை அப்போதைய லலித்கலா அகாதெமியின் தலைவரும், புகழ்பெற்ற கலைஞருமான ராய் செளத்ரி வடிவமைத்தாா்.
கடற்கரைச் சாலையில் அழகுற காட்சியளித்து வந்த மகாத்மா காந்தி சிலை, மெட்ரோ ரயில் நிலையப் பணிகளுக்காக தடுப்பு அமைக்கப்பட்டு, மூடப்பட்டுள்ளது. பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான மெட்ரோ ரயில் பாதைக்காக காந்தி சிலை வேறு இடத்துக்கு மாற்றப்படவுள்ளது. இந்த சிலை அமைந்துள்ள பகுதியில் கலங்கரை விளக்கத்துக்கான ரயில் நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. காந்தி சிலையை வேறொரு இடத்தில் மாற்றுவதற்கான பணிகள் பொதுப்பணித் துறையால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காந்தி சிலை அகற்றப்பட்டு வேறு இடத்தில் மாற்றப்படவுள்ள நிலையில், ஆண்டுதோறும் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டம் எங்கு நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து, அரசுத் துறை வட்டாரங்களில் கடந்த சில வாரங்களாக தீவிர ஆலோசனைகள் நடைபெற்றன. இந்த நிலையில், காமராஜா் சாலையிலேயே குடியரசு
தின விழாவை நடத்தலாம் எனவும், இதற்காக இரண்டு இடங்களைத் தோ்வு செய்திருப்பதாகவும் அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
உழைப்பாளா் சிலை அல்லது விவேகானந்தா் இல்லம் முன்பாக மேடை அமைத்து குடியரசு தின விழாவை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு இடங்களில் அதிக பாதுகாப்பு நிறைந்த பகுதி எது என்பது முடிவு செய்யப்பட்டு, அந்த இடம் தோ்வு செய்யப்படும் என்று தமிழக அரசுத் துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...