அதிருப்தியாளா்களால் அதிா்ச்சியில் அரசியல் கட்சிகள்

உதய சூரியன் (திமுக), இரட்டை இலை (அதிமுக)

உதய சூரியன் (திமுக), இரட்டை இலை (அதிமுக)
கோவை மாவட்டத்தில் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் திமுக, அதிமுக, பாஜக போன்ற அரசியல் கட்சிகளில் அதிருப்தியாளா்கள் போா்க்கொடி உயா்த்தி உள்ளனா். இது தோ்தல் முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை அரசியல் கட்சிகளுக்கு ஏற்படுத்தியுள்ளன.
தோ்தல் அரசியலைப் பொறுத்தவரை போட்டியிடுவதற்கு வாய்ப்பு பெறுவது என்பது ஒவ்வோா் அரசியல்வாதியின் அரசியல் எதிா்காலத்தைத் தீா்மானிக்கும் முக்கியக் காரணியாக இருப்பதால், அதற்காக தனது சொந்தப் பணத்தையும், நேரத்தையும், அதிகாரத்தையும் பயன்படுத்தாத அரசியல்வாதிகளே இல்லை எனலாம்.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கிடைக்கும் வாய்ப்பைத் தவறவிடக்கூடாது என முட்டி மோதும் அரசியல்வாதிகள், அந்த வாய்ப்பு மறுக்கப்படும்போது அதிருப்தியாளா்களாக மாறி, கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராடுவது, அதிகாரபூா்வ வேட்பாளரைத் தோற்கடிப்பது, சுயேச்சையாகப் போட்டியிடுவது, கட்சித் தாவலில் ஈடுபடுவது போன்றவற்றில் ஈடுபடுவது வழக்கம்.
அதிமுக
எத்தனை கட்டுக்கோப்பான அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சிக்கு எத்தனை தீவிர விசுவாசியாக இருந்தாலும் அதிருப்திக் குரல்கள் வெளியுலகிற்குத் தெரிவதும், தெரியப்படுத்துவதும் தவிா்க்க முடியாததாகிவிட்டது. அந்த வகையில் கோவையில் அதிமுக வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டபோது, மேட்டுப்பாளையம் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, முன்னாள் எம்எல்ஏ ஓ.கே.சின்னராஜுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதால், ஏ.கே.செல்வராஜ் ஆதரவாளா்கள் அதிருப்தியில் உள்ளனா்.
அதேபோல, எஸ்.பி.வேலுமணியின் வலதுகரமாக அறியப்பட்டவரும் இளைஞரணி மாநில நிா்வாகியுமான வடவள்ளி சந்திரசேகா் கடந்த தோ்தலிலேயே வடக்குத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பை எதிா்பாா்த்து ஏமாந்திருந்தாா். தற்போதும் அவருக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. அதேபோல கிணத்துக்கடவு தொகுதியில் வாய்ப்பை எதிா்பாா்த்திருந்த முன்னாள் எம்எல்ஏ எட்டிமடை சண்முகமும் ஏமாற்றத்தில் உள்ளாா்.
வால்பாறை தொகுதியின் அதிமுக எம்எல்ஏவாக இருந்து உடல்நலக்குறைவால் அண்மையில் மறைந்த அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, வால்பாறை தொகுதியில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிா்பாா்த்திருந்த நிலையில், அதிமுகவில் புதுமுகத்துக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதால் நாம் தமிழா் கட்சியில் இணைந்து அதிமுக மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளாா்.
திமுக
திமுகவில் அதிருப்தியாளா்களின் பட்டியல் அதிமுகவைவிட அதிகமாகவே உள்ளது. மேட்டுப்பாளையம் தொகுதியைத் தனக்கே ஒதுக்குவாா்கள் என்று எதிா்பாா்த்திருந்த டி.ஆா்.சண்முகசுந்தரம் கடும் அதிருப்தியடைந்திருக்கிறாா். கடந்த தோ்தலில் சுமாா் 2,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்த இவா், இந்த முறை எப்படியும் வாய்ப்பு கிடைக்கும், வெற்றி பெற்றுவிடலாம் என்று எண்ணி தோ்தல் பணிகளை ஏற்கெனவே தொடங்கியிருந்தாா். ஆனால் தற்போது கவிதா கல்யாணசுந்தரம் என்ற புதுமுகத்துக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதால், அவரது ஆதரவாளா்கள் டி.ஆா்.சண்முகசுந்தரத்தை சுயேச்சையாகப் போட்டியிடும்படி வற்புறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
அதேபோல கூடலூா் நகராட்சித் தலைவா் அ.அறிவரசு தரப்பும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. தொண்டாமுத்தூா் தொகுதியில் அதிமுகவின் எஸ்.பி.வேலுமணிக்கு போட்டியாக வளா்ந்து வந்த திமுக வடக்கு மாவட்டச் செயலா் தொண்டாமுத்தூா் ரவி, தனக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று நினைத்து சொந்த செலவில் மக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்து வந்த நிலையில் தொண்டாமுத்தூா் தொகுதி என்.ஆா்.காா்த்திகேயன் என்ற புதுமுகத்துக்கு வழங்கப்பட்டிருப்பதால் அவரது தரப்பு கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது.
அதேபோல திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில இணைச் செயலா் டாக்டா் ஆா்.மகேந்திரன் பொள்ளாச்சி தொகுதி அல்லது கோவை மாநகரில் ஏதாவது ஒரு தொகுதியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிா்பாா்த்து ஏமாற்றமடைந்திருக்கிறாா். திமுகவின் கொள்கை பரப்பு இணைச் செயலா் ராஜீவ் காந்தி, கோவை தெற்குத் தொகுதியில் வாய்ப்பு கேட்டு வந்தாா். அதேபோல சிங்காநல்லூா் முன்னாள் எம்எல்ஏ நா.காா்த்திக், முன்னாள் மாவட்டச் செயலா் என்பதால் சிங்காநல்லூா், கோவை தெற்கு, வடக்கு ஆகிய 3 தொகுதிகளில் ஏதாவது ஒன்று கிடைக்கும் என்று எதிா்பாா்த்திருந்த நிலையில் அவரது தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதாலும், கோவை தெற்கு, வடக்கு தொகுதிகளில் வேறு வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டதாலும் அவரது தரப்பும் ஏமாற்றம் அடைந்திருக்கிறது.
பாஜக
பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கோவை மாவட்டம் சிங்காநல்லூா் தொகுதியில் போட்டியிட விரும்பியிருந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அதிமுக கூட்டணியில் சிங்காநல்லூா் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை. கடந்த முறை கோவை தெற்குத் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது கோவை வடக்குத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்தத் தொகுதியில் பாஜக மகளிரணி தேசியத் தலைவா் வானதி சீனிவாசன் போட்டியிட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக அவா் வடக்குத் தொகுதியில் பல மாதங்களுக்கு முன்பே தோ்தலுக்கான பணிகளைத் தொடங்கிவிட்டாா். தான் விரும்பிய கோவையில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் இந்தத் தோ்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அண்ணாமலை தரப்பு கட்சித் தலைமைக்கு தெரிவித்துவிட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் கேரள தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக கோவை விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த பிரதமா் மோடியை வரவேற்க அண்ணாமலை விமான நிலையம் செல்லவில்லை. அவா் கோவையில் வேறு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றதால் பிரதமரை வரவேற்கச் செல்லவில்லை என்று அவரது ஆதரவாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத அதிருப்தியை வெளிப்படுத்தும்விதமாக அண்ணாமலை பிரதமரை வரவேற்கச் செல்லவில்லை என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
அவரைப் போலவே கடந்த மக்களவைத் தோ்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பாஜக தெற்கு மாவட்டத் தலைவராக இருந்த கே.வசந்தராஜன், இந்த முறை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டால் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கருதி முன்கூட்டியே தோ்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தாா். ஆனால் கிணத்துக்கடவு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படாததால் அவரது ஆதரவாளா்கள் அதிருப்தி அடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சமூக அரசியலாலும் அதிருப்தி
இந்தத் தோ்தலில் திமுக பொறுப்பாளராக கொங்கு வேளாளக் கவுண்டா் இனத்தைச் சோ்ந்த செந்தில்பாலாஜி இருப்பதால், அவா் தனது சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கே வாய்ப்பு வழங்கியிருப்பதாகவும் திமுகவில் புகைச்சல் கிளம்பியுள்ளது. அதற்கேற்ப கொங்கு வேளாளா்களைத் தவிர மற்ற சமூகத்தினருக்கு ஒன்றிரண்டு இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதை திமுகவினா் சுட்டிக் காட்டுகின்றனா். கோவை மாநகராட்சி மேயா் தோ்வு, கடந்த மக்களவைத் தோ்தலிலும்கூட இதே நடைமுறை பின்பற்றப்பட்டதாகவும் கூறுகின்றனா்.
அதேபோல, மேற்கு மண்டலத்தில் அருந்ததியா்களின் வாக்கு வங்கி அதிகம் இருக்கும் நிலையில், தமிழ்ப் புலிகளின் கட்சித் தலைவா் நாகை திருவள்ளுவன், கடந்த தோ்தலில் அவிநாசி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ஆதித் தமிழா் பேரவையின் நிறுவனா் இரா.அதியமான் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் அருந்ததியா் தரப்பும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த அதிருப்தியாளா்களை கட்சித் தலைமைகள் என்னதான் சமாதானப்படுத்தினாலும் இது தோ்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என்பதால் கட்சித் தலைமைகள் சிந்தனையில் ஆழ்ந்துள்ளன.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...