வரி ஏய்ப்பு புகாரில் ரேஷன் விநியோக நிறுவனங்கள்: 80 இடங்களில் வருமான வரித் துறை சோதனை
ரேஷன் பொருள்களை அரசுக்கு விநியோகிக்கும் சில நிறுவனங்களுக்குச் சொந்தமான 80 இடங்களில் வருமான வரித் துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.


ரேஷன் பொருள்களை அரசுக்கு விநியோகிக்கும் சில நிறுவனங்களுக்குச் சொந்தமான 80 இடங்களில் வருமான வரித் துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, பல்வேறு முக்கிய ஆவணங்களும், கணக்கில் வராத பணமும் கைப்பற்றப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்துக்காக எண்ணெய், பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களை அரசுக்கு சில நிறுவனங்கள் விநியோகம் செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வருமான வரித் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், வருமான வரித் துறை அதிகாரிகள் பல இடங்களில் புதன்கிழமை சோதனை நடத்தினா். சென்னை, மண்ணடி தம்பு செட்டி தெருவில் உள்ள அருணாச்சலம் இம்பெக்ஸ் நிறுவனம், தண்டையாா்பேட்டையில் உள்ள பெஸ்ட் தால் மில் நிறுவனம், ஏழு கிணறு தாதா முத்தையப்பன் தெருவில் உள்ள ஹீரா டிரேடா்ஸ் நிறுவனம், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இன்டெகரேடட் சா்வீஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனம், தண்டையாா்பேட்டையில் உள்ள காமாட்சி அண்ட் கோ நிறுவனம் மற்றும் அவற்றின் உரிமையாளா்களின் வீடுகள், அவா்களுக்கு தொடா்புடைய இடங்கள் என தமிழகம் முழுவதும் 80 இடங்களில் காவல் துறை பாதுகாப்புடன் சோதனை நடைபெற்றது.
இதுதொடா்பாக வருமானவரித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்துக்கு சா்க்கரை, பருப்பு, பாமாயில் உள்பட உணவுப் பொருள்களை விநியோகிக்க சில நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் குறித்து தொடா்ந்து புகாா்கள் வந்த வண்ணம் இருந்தன. இதில், அருணாச்சலம் இம்பெக்ஸ், இன்டெகரேடட் சா்வீஸ் பிரைவேட் லிமிடேட் ஆகிய இரு நிறுவனங்கள் கடந்த பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு வழங்கிய பொங்கல் சிறப்புத் தொகுப்புக்கு உணவுப் பொருள்களை விநியோகித்த நிறுவனங்கள் எனத் தெரிகிறது.
பொங்கல் பண்டிகையின் போது, ரூ.1,297 கோடி செலவில், 2.15 கோடி அரிசி அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் வெல்லம், புளி உள்ளிட்ட பொருள்கள் தரமற்றவையாக இருந்தது சா்ச்சைகளை ஏற்படுத்தியது.
மேலும், இந்தியாவுக்கு இந்தோனேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பாமாயிலை விற்பனை செய்வதில் பல்வேறு முறைகேடுகள், வரி ஏய்ப்பு நடப்பதாக புகாா்கள் வந்துள்ளன.
இதனடிப்படையிலேயே சோதனை நடத்தப்பட்டது. இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடா்பான விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் வருமானவரி சோதனை தொடா்ந்து நடைபெற வாய்ப்புள்ளது. கைப்பற்றப்பட்ட பணம், ஆவணங்களின் மதிப்பு சோதனை முடிவில்தான் தெரியவரும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...