ரத்த சோகை என்பது ரத்தத்தில் கலந்திருக்கும் ஹீமோகுளோபின் அளவு குறையும் போது ஏற்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் அனீமியா என்கிறார்கள். தற்போது உணவுப் பழக்க வழக்க மாற்றங்களால் அனீமியா இல்லாத பெண்களே இல்லாத நிலை உருவாகிவருகிறது.
இந்த நிலையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் பென்னாகரம் பகுதியில் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்த சோகையைப் போக்க கடந்த 10 மாதங்களாக நாள்தோறும் எள் உருண்டை சாப்பிடும் வழக்கம் ஏற்படுத்தப்பட்ட பிறகு, 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு ரத்த சோகை இருப்பது 13.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | வாடகைத்தாய் மூலம் குழந்தைகள்: நயன்தாரா விதி மீறலா?
பென்னாகரத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 177 அங்கன்வாடி மையங்களில் இருக்கும் சிறார்களுக்கு ஏற்படும் ரத்த சோகையைப் போக்க முன்மாதிரி திட்டம் உருவாக்கப்பட்டது.
நாள்தோறும் இரும்புச் சத்து நிறைந்த உணவுப் பொருள்களை சிறுவர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி, 3,685 பிள்ளைகளுக்கு நாள்தோறும் எள் உருண்டை வழங்கப்பட்டது. அதுபோல அவர்களது ஹீமோகுளோபின் அளவும் அவ்வப்போது பரிசோதிக்கப்பட்டது.
இதில், குழந்தைகளுக்கு ஏற்பட்ட ரத்தசோகை 13.1 சதவீதமாகக் குறைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரி ஜான்ராணி கூறுகையில், 2021ஆம் ஆண்டு இந்த திட்டத்தைத் தொடங்கும் போது, 33 குழந்தைகளுக்கு ரத்த சோகை 7 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தது. ஆனால் தற்போது அனைவரும் குணமடைந்துவிட்டனர். அதுபோல 532 பேருக்கு 7 முதல் 9 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது தற்போது 323 பேராகக் குறைந்துள்ளது.
முதல் முறையாக பரிசோதனை செய்த போது 1,544 குழந்தைகள் மட்டுமே ஹீமோகுளோபின் அளவு 11க்கு மேல் இருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 2,022 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பென்னாகரம் பகுதியில் இந்த திட்டம் தொடங்கப்பட்டபோது ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 58.1 சதவீதமாக இருந்தது. இது தற்போது 13.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.
11 சதவீதத்துக்கும் குறைவான ஹீமோகுளோபின் இருப்பவர்கள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்களாகக் கருதப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.