சென்னை: சென்னையில், 17 வயது இளைஞர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், திடீர் திருப்பமாக, அவருக்கு டியூஷன் எடுத்துவந்த 23 வயதாகும் தனியார் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியை ஷர்மிளா, அந்த மாணவருடன் நெருங்கிப் பழகி வந்ததும், திடீரென, இளைஞருடன் பேசுவதை நிறுத்தியதும் அவருக்கு, வேறொருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததால், மனமுடைந்த பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்டிருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. மீண்டும் ஒரு சுவாதியா? ரயில் முன் தள்ளி இளம்பெண் கொலை: இளைஞர் கைது
ஆனால், தற்கொலை செய்து ஒரு மாதத்துக்குப் பின், இந்த வழக்கில் ஆசிரியை கைது செய்யப்பட்டிருப்பதற்குக் காரணம், இந்த தாமதம் ஏன் நேரிட்டது என்று காவல்துறை விளக்கம் அளிக்கவில்லை.
தற்கொலை செய்து கொண்ட இளைஞர் சென்னையில் வசித்து வந்துள்ளார். பனிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு, ஆகஸ்ட் 30ஆம் தேதி கலைக் கல்லூரியில் நடந்த கலந்தாய்வு கலந்து கொண்டு கல்லூரிப் படிப்பை தேர்வு செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
பிறகு, அன்று மாலை அவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அம்பத்தூர் காவல்நிலைய காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
தனது மகன் தற்கொலைக்குக் காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்று கோரி அவரது தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், அவரது வீட்டில் தற்கொலை கடிதம் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. எனவே, இளைஞரின் செல்லிடப்பேசியை வைத்து விசாரணையை காவல்துறையினர் தொடங்கினர்.
அப்போதுதான், அவரது செல்லிடப்பேசி மூலம், பள்ளி ஆசிரியர் ஒருவருடன் அவர் நெருங்கிப் பழகி வந்ததும், அந்த ஆசிரியை தொடர்ந்து மாணவருடன் பேசுவதும், சாட் செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. மாணவரும், ஆசிரியையும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் செல்லிடப்பேசியில் இருந்ததும் தெரிய வந்தது.
பள்ளியிலும், மாணவரின் நண்பர்களிடம் இது பற்றி விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், சம்பந்தப்பட்ட ஆசிரியை ஷர்மிளா, அதேப் பள்ளியில் 10 வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வந்துள்ளார். வீட்டில் டியூஷன் நடத்தி வரும்போது, இந்த மாணவருடன் பழக்கம் ஏற்பட்டது தெரிய வந்தது.
மாணவருடனான நட்பை துண்டித்த ஆசிரியை
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், இருவரும் ஒன்றாக புகைப்படங்கள் எடுத்துள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த ஆசிரியைக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அதன்பிறகு அந்த ஆசிரியை மாணவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். ஆனால், இந்த உறவை உண்மை என்று நம்பியிருந்த மாணவரால் இதனைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
தொடர்ந்து ஷர்மிளாவுடன் பேச முயன்றுள்ளார். ஆனால் ஷர்மிளா மாணவரைக் கண்டுகொள்ளவில்லை. எனவே, மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஷர்மிளா மீது குழந்தையை தற்கொலைக்குத் தூண்டுதல், பாலியல் ரீதியான துன்புறுத்துவது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.