'எனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக் கூடாது': கொலையாளி சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்!

ஒடும் ரயில் முன் மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த சதீஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
'எனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக் கூடாது': கொலையாளி சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்!
Published on
Updated on
2 min read

ஒடும் ரயில் முன் மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த சதீஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை அருகே உள்ள ஆதம்பாக்கம் ராஜா தெரு காவலா் குடியிருப்பு பகுதியை சோ்ந்தவா் மாணிக்கம் (47). இவரது மனைவி வரலட்சுமி (43). இவா், ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறாா். இத் தம்பதியின் மகள் சத்யா (20). இவா் தியாகராயநகரில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பிகாம் இரண்டாமாண்டு படித்து வந்தாா்.

அதே பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் தயாளன் மகன் சதீஷ் (23). சத்யாவை ஒரு தலையாக காதலித்து வந்தாராம். சதீஷ், சத்யாவிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியும் தொந்தரவும் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் சத்யா அதை ஏற்றுக் கொள்ளவில்லையாம். அண்மையில் சதீஷ், சத்யாவை தாக்கவும் செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்றுள்ளது. இதில் இரு தரப்பினரையும் காவல்துறையினர் சமாதானம் செய்து அனுப்பியதாகத் தெரிகிறது.

இந்நிலையில் சத்யா, வியாழக்கிழமை வழக்கம்போல கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்தாா். அப்போது அங்கு நின்றுக் கொண்டிருந்த சதீஷ், சத்யாவை வழிமறித்து தகராறு செய்துள்ளாா்.

அப்போது தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த மின்சார ரயில் முன் சதீஷ் திடீரென சத்யாவை தள்ளிவிட்டாா். இதில் ரயிலில் சிக்கி சத்யா, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதைப் பாா்த்த பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

உடனே அவா்கள், சதீஷை பிடிக்க முயற்சித்தனா். ஆனால் அதற்குள் சதீஷ் அங்கிருந்து தப்பியோடினாா். இது குறித்து தகவலறிந்த ரயில்வே போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சத்யா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில், மாணவியின் தந்தை மாரடைப்பால் மரணமடைந்ததாகக் கூறப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக, அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

மாணவி சத்யாவின் தந்தை மாணிக்கம், தனது மகள் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் மாரடைப்பால் மரணமடைந்ததாகக் கூறப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், மகளின் இறப்பைத் தாங்க முடியாமல் அவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

தப்பிஓடிய சதிஷை தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் தேடி வந்தனர். துரைப்பாக்கத்தில் தலைமறையாக இருந்த சதிஷை கைது செய்தனர்.

காவல் துறையினர் நடத்திய விசாரனையில், சதிஷ் கூறியதாவது:

சத்யாவை நான் 2 ஆண்டுகளாக காதலித்து வருகிறேன். ஆனால் சத்யா என்னுடைய காதலை ஏற்கவில்லை. தொடர்ந்து என் காதலை ஏற்குமாறு வற்புறுத்தினேன். சத்யா மனம் மாறுவார் என்று என்ணினேன்.

இருப்பினும் என் காதலை ஏற்கவில்லை. சத்யாவை என்னால் மறக்க முடியவில்லை. இதையடுத்து சத்யாவை கொலை செய்ய திட்டமிட்டேன்.  

தினமும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்து தான் சத்யா கல்லூரிக்கு செல்வார். இதனால் அங்கு வைத்து ரயிலில் தள்ளி விட்டு கொன்று விடலாம் என்று முடிவு செய்தேன். 

இதற்காக நேற்று(வியாழக்கிழமை) மதியம் பரங்கிமலை ரயில் நிலையத்தில் முன் கூட்டியே சென்று காத்திருந்தேன். பரங்கிமலை ரெயில் நிலையத்துக்கு சத்யா தனது தோழியுடன் வந்ததை பார்த்ததும் அவரது அருகில் சென்று பேசினேன்.

அவள் என்னை மதிக்காத வகையில் நடந்து கொண்டார். எனக்கு கிடைக்காத சத்யா வேறு யாரையும் திருமணம் செய்து கொண்டு வாழக்கூடாது என்ற எண்ணத்தில் ஓடும் ரயிலில் சத்யாவை தள்ளிவிட்டு, அங்கிருந்து ஓடிவிட்டேன் என்று சதிஷ் வாக்குமூலம் அளித்தார்.


காவல் துறையினர் சதிஷிடம் வாக்குமூலத்தை பெற்று, பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சதிஷை சிறையில் அடைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com