சென்னை பரங்கிமலையில் ஓடும் ரயில் முன்பு கல்லூரி மாணவி கீழே தள்ளப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடப்பட்டு வந்த இளைஞர் சதீஷ் தற்போது போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கொலையின் பின்னணிக்கான காரணம் என்ன என்பது வெளியாகியுள்ளது.
சென்னை அருகே உள்ள ஆதம்பாக்கம் ராஜா தெரு காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (47). இவரது மனைவி வரலட்சுமி (43). இவர், ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இத் தம்பதியின் மகள் சத்யா (20). இவர் தியாகராயநகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாமாண்டு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தயாளன் மகன் சேர்ந்த சதீஷ் (23), சத்யாவை ஒரு தலையாக காதலித்து வந்தாராம். சதீஷ், சத்யாவிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியும், தொந்தரவும் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், சத்யா அதை ஏற்றுக் கொள்ளவில்லையாம்.
அண்மையில் சதீஷ், சத்யாவை தாக்கவும் செய்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்றுள்ளது. இதில் இரு தரப்பினரையும் போலீஸார் சமாதானம் செய்து அனுப்பியதாக தெரிகிறது.
ரயிலில் தள்ளிவிட்டு கொலை: இந்நிலையில் சத்யா, வியாழக்கிழமை வழக்கம்போல கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சதீஷ், சத்தியாவை வழிமறித்து தகராறு செய்துள்ளார்.
அப்போது தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் சென்று கொண்டிருந்த மின்சார ரயில் முன் சதீஷ் திடீரென சத்யாவை தள்ளிவிட்டார். இதில் ரயிலில் சிக்கி சத்யா, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள், சதீஷை பிடிக்க முயற்சித்தனர். ஆனால், அதற்குள் சதீஷ் அங்கிருந்து தப்பியோடினார்.
இது குறித்து தகவலறிந்த ரயில்வே போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சத்யா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச் சம்பவம் குறித்து தகவலறிந்த ரயில்வே காவல்துறை ஏடிஜிபி வனிதா உள்ளிட்ட உயர் அதிகாரிகள், அங்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். இது குறித்து பரங்கிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தப்பியோடிய சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
சதீஷைப் பிடிக்க தீவிர விசாரணையில் ஈடுபட்ட தனிப்படையினர், ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்துடன் சம்பவத்தை நேரில் பார்த்த கல்லூரி மாணவர்கள், பயணிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
சத்யாவின் தந்தை மரணம்: இந்நிலையில், மாணவி சத்யாவின் தந்தை மாணிக்கம், தனது மகள் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் மாரடைப்பால் மரணமடைந்ததாகக் கூறப்பட்ட நிலையில், மகளின் இறப்பைத் தாங்க முடியாமல் அவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சதீஷ் கைது: இதனிடையே, சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்தவிட்டு தலைமறைவாகி துரைப்பாக்கம் பகுதியில் இரவில் சுற்றித்திரிந்த சதீஷை காவல்துறையினர் கைது செய்து, காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொலையின் பின்னணி என்ன? இந்த நிலையில் கல்லூரி மாணவி சத்யாவை கொலை செய்வதற்கான காரணங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
அதாவது, பள்ளிப் பருவம் முதலே சத்யாவும் சதீஷ் காதலித்து வந்த நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக சதீஷை விட்டு சத்யா பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சத்யாவுக்கு வேறொரு நபருடன் நிச்சயார்த்தம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சதீஷ், வழக்கம்போல வியாழக்கிழமை கல்லூரிக்கு செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையம் வந்த மாணவி சத்யாவிடம் அங்கு நின்று கொண்டிருந்த சதீஷ் வழிமறித்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றவே கோபத்தின் உச்சத்திற்கு சென்ற சதீஷ், தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் சென்று கொண்டிருந்த மின்சார ரயில் முன் சத்யாவை தள்ளிவிட்டுள்ளார். இதில், ரயிலில் சிக்கி சத்யா, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
சத்யா கொலை விவகாரத்தில் சதீஷிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவுக்கு பின்னரே கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது தெரியவரும்.
2016 ஆல் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென் பொறியாளர் சுவாதி, 2021 இல் தாம்பரம் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சுவேதா, 2022 இல் சத்யா என சென்னை ரயில் நிலையங்களில் இளம்பெண், மாணவிகள் படுகொலைகள் தொடர்வது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் 2026: தமிழ்நாட்டில் தவெக ஆட்சி? - நேரலை...

போளூா் தொகுதியில் தவெக வேட்பாளா் வெற்றி!

ஜபல்பூா் படகு விபத்து: தந்தை, மகன் உடல்கள் திருச்சிக்கு கொண்டுவரப்பட்டன

கோடை மாதங்களில் அதிகபட்ச நீா் உற்பத்தியை பராமரிக்க ரேகா குப்தா உத்தரவு
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


