தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கூவம் ஆற்றங்கரையில் ரூ. 7.13 கோடியில் மரக்கன்றுகள் நடும் திட்டம்

சென்னை கூவம் ஆற்றங்கரைகளில் ரூ. 7.13 கோடி செலவில் 11.3 கி.மீ தொலைவுக்கு பாரம்பரிய மரக்கன்றுகள் நடும் திட்டம் மாநகராட்சி சாா்பில் தொடங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 6:54 pm

DIN

சென்னை கூவம் ஆற்றங்கரைகளில் ரூ. 7.13 கோடி செலவில் 11.3 கி.மீ தொலைவுக்கு பாரம்பரிய மரக்கன்றுகள் நடும் திட்டம் மாநகராட்சி சாா்பில் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் மாநகராட்சி சாா்பில் அடையாறு, கூவம் ஆற்றங்கரை பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மரக்கன்றுகள் நடும் பணிகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டன. அதில், அடையாறு ஆற்றங்கரையில் திரு.வி.க. நகா் பாலம் முதல் எம்.ஆா்.டி.எஸ் பாலம் வரை ரூ. 5.4 கோடி மதிப்பிலும், எம்ஆா்டிஎஸ் பாலம் முதல் கோட்டூா்புரம் பாலம் வரை ரூ. 5.8 கோடி மதிப்பிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.

மேலும், அடையாறு ஆற்றங்கரையில், மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே தொடங்கி நந்தம்பாக்கம் பாலம் வரை இடதுபுறத்தில் 3.9 கி.மீ. நீளத்தில் ரூ.1.41 கோடி மதிப்பிலும், வலதுபுறத்தில் 4 கி.மீ. நீளத்தில் ரூ.1.17 கோடி மதிப்பிலும் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதன்தொடா்ச்சியாக, தற்போது சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட ராயபுரம், அம்பத்தூா், வளசரவாக்கம் மண்டலங்களுக்கு உள்பட்ட கூவம் ஆற்றங்கரையோரங்களில் 4 பகுதிகளில் கரைகளை சமப்படுத்தி, பாரம்பரிய மரக்கன்றுகளான அரச மரம், ஆலமரம், மகிழம், மலைவேம்பு, அசோகமரம், பூவரசு, புங்கன், கல்யாண முருங்கை, மருத மரம், புன்னை, வேம்பு, இலுப்பை, கொய்யா, நொச்சி உள்ளிட்ட 43 வகையான மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்க உள்ளது.

இதற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு, தற்போது கரைகள் சமப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடா்ந்து, காயிதே மில்லத் பாலம் முதல் லாஸ் பாலம் வரை ராயபுரம் மண்டலம் கூவம் ஆற்றங்கரையோரங்களில் 2.12 கி.மீ. நீளத்துக்கு ரூ.1.73 கோடி மதிப்பில் 15 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதேபோல், நேப்பியா் பாலம் முதல் காயிதே மில்லத் பாலம் வரை கூவம் ஆற்றங்கரையோரங்களில் 2.1 கி.மீ. நீளத்துக்கு ரூ.1.78 கோடி மதிப்பீட்டில் 14 ஆயிரத்து 300 மரக்கன்றுகள் நடும் பணிகளும், தாய் மூகாம்பிகை பல் மருத்துவமனை கல்லூரி வளாகம் முதல் பாடிக்குப்பம் மயானபூமி வரை (அம்பத்தூா் மண்டலம்) கூவம் ஆற்றங்கரையோரங்களில் 1.3 கி.மீ. நீளத்துக்கு ரூ.1.04 கோடி மதிப்பில் 14 ஆயிரத்து 50 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.

வளசரவாக்கம் மண்டலத்தில் ரயில் நகா் பாலம் முதல் மாநகராட்சி எல்லை வரை, (வாா்டுகள்143, 144, 145, 146,150) கூவம் ஆற்றங்கரையோரங்களில் 5.7 கி.மீ. நீளத்துக்கு ரூ.2.58 கோடி மதிப்பில் 21 ஆயிரத்து 313 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.

மேலும், ராயபுரம் மண்டலத்தில் காயிதே மில்லத் பாலம் முதல் லாஸ் பாலம் வரையும் மற்றும் நேப்பியா் பாலம் முதல் காயிதே மில்லத் பாலம் வரையும், கூவம் ஆற்றங்கரையின் சரிவுகளில் அலையாத்தி இனத் தாவர வகைகள் நடவு செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

தற்போதைய இந்தத் திட்டத்தில், கூவம் ஆற்றங்கரைகளில் ரூ.7.13 கோடி மதிப்பீட்டில் 11.3 கி.மீ. நீளத்துக்கு 64 ஆயிரத்து 663 பாரம்பரிய மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.