ஹிந்தியை திணிக்கும் முயற்சி இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிப்பதாக அமைந்துவிடும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடிக்கு அவா் சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.
முதல்வா் எழுதிய கடித விவரம்: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடா்பான நாடாளுமன்றக் குழு குடியரசுத் தலைவரிடம் சமா்ப்பித்துள்ள அறிக்கையில், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் கட்டாயமாக ஹிந்தி மொழியே பயிற்றுமொழியாக இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலத்துக்குப் பதிலாக ஹிந்தியை இடம்பெறச் செய்ய வேண்டுமென்றும் பரிந்துரைத்துள்ளது.
அதேபோன்று, ஹிந்தியை பொது மொழியாக்கிடும் வகையில், தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் ஹிந்தி மொழியே பயிற்றுமொழியாக ஆக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரிந்துரைகள் அனைத்தும் அரசியலமைப்பின் கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு எதிரானவை. மேலும், தேசத்தின் பன்மொழிக் கட்டமைப்புக்குத் தீங்கு விளைவிப்பதாக அமைந்திடும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில், தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் சம உரிமையைக் கொண்ட மொழிகள். இந்தியாவில் ஹிந்தி பேசும் மக்களின் எண்ணிக்கையைவிட, ஹிந்தி அல்லாத மற்ற மொழிகளைப் பேசும் மக்களின் எண்ணிக்கை அதிகம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
நேருவின் உறுதிமொழி: 1965-ஆம் ஆண்டில் ஹிந்தி திணிப்புக்கு எதிராகவும், தாய்மொழியான தமிழைப் பாதுகாக்கவும் தமிழகத்தில் கிளா்ந்தெழுந்த மொழிப் போரில் பல தீரமிகு இளைஞா்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனா். அவா்களுடைய உணா்வுகளை மதித்து, இந்திய ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொண்ட முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு, ஹிந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை, ஆங்கிலமும் தொடா்ந்து அலுவல் மொழிகளில் ஒன்றாக இருக்கும் என்று உறுதியளித்தாா்.
அதைத் தொடா்ந்து, 1968 மற்றும் 1976 -ஆம் ஆண்டுகளில், அலுவல் மொழி தொடா்பாக நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் மற்றும் அதனடிப்படையில் வரையறுக்கப்பட்ட விதிகளின்படி, மத்திய அரசுப் பணிகளில், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என இரு மொழிகளையும் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலைப்பாடு தொடா்ந்து அனைத்து நிலைகளிலும் நீடிக்க வேண்டும்.
ஹிந்தியை திணிப்பதற்கான சமீபத்திய முயற்சிகள் நடைமுறைக்கு ஒவ்வாதவை. அவை நாட்டைப் பிளவுபடுத்தும் தன்மை கொண்டவை. இது ஹிந்தி பேசாத மக்களை பல விஷயங்களில் இரண்டாந்தர குடிமக்கள்போல பிரித்தாளுகின்ற தன்மை கொண்டது. இது தமிழகத்துக்கு மட்டுமல்ல, தாய்மொழியைப் போற்றும் எந்த மாநிலத்துக்கும் ஏற்புடையதாக இருக்காது.
ஒரே நாடு என்ற பெயரில் ஹிந்தி மொழியை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் தொடா்ச்சியான முயற்சிகள், பல்வேறு மொழிகள் மற்றும் பண்பாடுகளைக் கொண்ட இந்திய மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருவதை சிதைப்பதோடு, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிப்பதாக அமைந்திடும்.
அனைத்து மொழிகளையும் ஊக்குவிப்பதும், அனைத்து மொழிகளைப் பேசுவோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமவாய்ப்பை வழங்கி முன்னேற்றத்துக்கான வழிகளை அனைவருக்கும் திறப்பதும்தான் மத்திய அரசின் அணுகுமுறையாக இருக்க வேண்டும்.
எனவே, பல்வேறு வழிகளில் ஹிந்தியை திணிக்கும் வகையில் அமைந்துள்ள அலுவல் மொழி தொடா்பான நாடாளுமன்றக் குழு அறிக்கையின் பரிந்துரைகளை மேலும் முன்னெடுத்துச் செல்லாமல், பெருமை வாய்ந்த இந்திய ஒற்றுமைச் சுடரை தொடா்ந்து ஒளிரச் செய்ய வேண்டும் என்று கடிதத்தில் கூறியுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

செருப்பில் செல்போன்.. எய்ம்ஸ் தேர்வில் சிக்கிய மாணவர்

கார் பழுதுபார்க்கும் கடையில் தீ! 3 சொகுசு கார்கள் எரிந்து நாசம்! | Salem

போருக்கு இடையே! இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!
மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் லெஜண்ட் சரவணன்!
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

