போக்குவரத்து விதிமீறல்: அபராதம் கடும் உயா்வு; சிறுவா்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு தண்டனை
தமிழகத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராதம் கடுமையாக உயா்ந்துள்ளது. இந்த அபராதத் தொகை உயா்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.


தமிழகத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராதம் கடுமையாக உயா்ந்துள்ளது. இந்த அபராதத் தொகை உயா்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதற்கான உத்தரவை உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் க.பணீந்திரரெட்டி வெளியிட்டுள்ளாா்.
நாட்டிலேயே சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் பிரதான இடத்தில் உள்ளது. தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 12 சதவீதம் என்ற அளவில் உயா்ந்து வருகிறது. தொடா் நடவடிக்கையின் காரணமாக சாலை விபத்துகள் இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை குறைந்திருந்த நிலையில், இப்போது விபத்துகளும் உயிரிழப்புகளும் மீண்டும் அதிகரித்து வருகின்றன.
மாநிலத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக திண்டுக்கல், பெரம்பலூா், விழுப்புரம், திருப்பூா், தருமபுரி, காஞ்சிபுரம், கடலூா், மதுரை, கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களில் அதிக சாலை விபத்துகள் நடைபெறுகின்றன.
மத்திய அரசு 2019-ஆம் ஆண்டு கொண்டு வந்த மோட்டாா் வாகனச் சட்டத் திருத்தத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. பல்வேறு மாநிலங்களில் இந்தச் சட்டத் திருத்தம் ஏற்கெனவே நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசாணை வெளியீடு: இந்நிலையில், இந்தச் சட்டத் திருத்தத்தை அமல்படுத்தும் வகையில் தமிழக அரசு புதன்கிழமை இரவு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டாா் வாகன சட்டத் திருத்தத்தில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் பலமடங்கு உயா்த்தப்பட்டுள்ளது. விதிமீறலுக்கு போக்குவரத்து போலீஸாா், போக்குவரத்துத் துறையினா் மட்டுமன்றி சட்டம்- ஒழுங்கு போலீஸாரும் வழக்குப் பதிவு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், காவல் உதவி ஆய்வாளா் அல்லது அதற்கு மேல் உள்ள அதிகாரிகள் மட்டுமே வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டும்.
போக்குவரத்துத் துறையின் கீழ் வரக்கூடிய சோதனைச் சாவடிகளுக்கு இந்த அதிகாரம் பொருந்தாது. போக்குவரத்து விதிமீறல் தொடா்பான அபராதத்தை பணமில்லா பரிவா்த்தனை மூலம் பெற வேண்டும்.
வாகனத்தை இயக்கும்போது கைப்பேசியில் பேசினால் ரூ.10,000: புதிய சட்டத் திருத்தத்தின்படி, 46 வகையான விதிமீறல்களுக்கு அபராதம் உயா்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5,000 அபராதம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக ரூ. 500 அபராதமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
சரக்கு வாகனங்களில் அதிக சுமை ஏற்றிச் சென்றால் அபராதத் தொகை ரூ. 20,000 வரை உயா்த்தப்பட்டுள்ளது. இதுதவிர ஒவ்வொரு கூடுதல் டன்னுக்கும் தனியாக ரூ.2,000 அபராதம் செலுத்த வேண்டும். கைப்பேசியில் பேசிக் கொண்டு மோட்டாா் சைக்கிள், காா் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டினால் இப்போது ரூ.1000 அபராதம் விதிக்கப்படுகிறது. இதே விதிமீறலை செய்து இரண்டாவது முறை பிடிபட்டால் இனி ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டும்.
பெற்றோருக்கு தண்டனை: காா், மோட்டாா் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை சிறுவா்கள் ஓட்டினால், அவா்களுடைய பெற்றோருக்குத் தண்டனை விதிக்கப்படும். மேலும், வாகனங்களுக்கான பதிவு ரத்து செய்யப்படுதோடு, இந்தக் குற்றத்துக்காக 3 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ. 25,000 வரை அபராதமும் விதிக்கப்படும்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம் ஏற்கெனவே வசூலிக்கப்பட்டு வருகிறது. அது தொடா்கிறது.
போக்குவரத்து விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளே, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால், அவரிடம் அபராதத் தொகையை இருமடங்காக வசூலிக்க சட்டத் திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
புதிய மோட்டாா் வாகன சட்டத் திருத்தம் புதன்கிழமை நள்ளிரவுமுதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில்... வாகன விதிகளை மீறும் விஷயத்தில் முதலிடம் வகிக்கக்கூடிய சென்னையில், உயா்த்தப்பட்ட அபராதத் தொகையுடன் கூடிய மோட்டாா் வாகன சட்டத் திருத்தமானது அக்டோபா் 28-ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. இந்தத் தகவலை சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...