மேட்டூரில் பிரபல ரெளடி வெட்டிக் கொலை!

சேலம் மாவட்டம் மேட்டூரில் அரசு மருத்துவமனையில் புகுந்து பிரபல ரெளடி  வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூரில் அரசு மருத்துவமனையில் புகுந்து பிரபல ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டூர் தொட்டில் பட்டியைச் சேர்ந்தவர் ரகு என்கிற ரகுநாதன் (22) பிரபல ரெளடி. இவர் பெயின்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மகாலட்சுமி என்ற மனைவியும் சசி (5), கிருத்திகா(2) என்ற பெண் குழந்தைகளும் உள்ளனர்.

ரகுநாதனும் அதே பகுதியை சேர்ந்த சென்ட்ரிங் வேலை செய்யும் வெள்ளையன் என்கிற மாரிகவுண்டனும் நண்பர்கள். ஒரே குழுவாக இருந்து பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். 2019-ம் ஆண்டு முதல் ரகுநாதன் தொட்டில் பட்டியில் உள்ள வேறு குழுவில் சேர்ந்து கொண்டார். இதனால் வெள்ளையனுக்கும் ரகு நாதனுக்கும் முன் விரோதம் ஏற்பட்டது. 

தீபாவளி நாளான நேற்று வெள்ளையன் தனது கூட்டாளிகளுடன் ரகுவின் வீட்டிற்கு சென்று வேறு குழு நபர்களுடன் சேர்ந்துக் கொண்டு எனக்கு எதிராக செயல்படுகிறாயா எனகேட்டு தகராறு செய்து தாக்கியுள்ளனர். இதில் ரகுவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த ரகுவின் கூட்டாளிகளும், பொதுமக்களும் கருமலைக்கூடல் காவல்துறைக்கு  தகவல் அளித்துள்ளனர். அங்கு வந்த கருமலைக்குடல் காவல்துறையினர் கும்பலை விரட்டியடித்து உள்ளனர். 

ரகுநாதன் வெள்ளையன் கும்பல் மீது காவல்துறையில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றுள்ளார். இதனை அறிந்த வெள்ளையன் மேட்டூர் அனல் மின்நிலைய 4 ரோட்டை சேர்ந்த கண்ணன் மகன் மூர்த்தி (36), நாட்டாமங்கலத்தைச் சேர்ந்த மாது மகன் பிரகாஷ் (30),  மாற்றும் சிலருடன் பின் தொடர்ந்து சென்றார். அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக ரகு அமர்ந்திருந்த போது அங்கு வந்த வெள்ளையன் மற்றும் அவரது கூட்டாளிகள் சூரிய கத்தியை காட்டி மிரட்டவே அங்கிருந்த செவிலியர்கள் மருத்துவ பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் அங்கிருந்து ஓடினார்கள். 

வெள்ளையன் கும்பல் ரகுநாதனை கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்தனர்.  அங்கிருந்த காவலர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அக்கும்பலை தப்பவிடாமல் கதவை தாழிட்டனர். உடனடியாக மேட்டூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். மேட்டூர் டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் வந்த காவல்துறையினர்  கொலையில் ஈடுபட்டவர்களை பிடித்தனர்.

கொலையாளிகள் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் காவல்துறையினர் கைப்பற்றினார்கள். தீபாவளி தினத்தன்று ரெளடி கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் மேட்டூரில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருமலைக் கூடல் காவல் நிலைய எல்லையில் ரெளடிகளுக்குள் தகராறு ஏற்பட்ட சமயத்திலேயே காவல்துறையினர் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தால் இந்த கொலை நடந்திருக்காது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கருமலைக்கூடல் காவல்துறையினர் அலட்சியம் காரணமாகவே ரகுநாதன் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் ரெளடிகளின் அட்டகாசம் மேட்டூரில் தலை தூக்கி உள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த வழக்கில் பிடிபட்டுள்ள வெள்ளையன் அண்மையில் நடைபெற்ற திருட்டு வழக்கில் சிறைச்சென்று  வெளிவந்துள்ளார். மூர்த்தி பிரகாஷ் ஆகியோர் டேங்கர் வெல்டிங் வேலை செய்து வருகின்றனர். இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேட்டூர் அரசு மருத்துவமனை வளாகத்திலும், ரகுநாதனின் வீடு உள்ள தொட்டில் பட்டி பகுதியிலும் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ரகுநாதனின் மனைவி மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மேட்டூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com