வள்ளிமலை அரசு கலைக்கல்லூரிக்கு விரைவில் புதிய கட்டடம்: அமைச்சா் துரைமுருகன்
வள்ளிமலையில் தொடங்கப்பட்டுள்ள அரசு கலைக் கல்லூரிக்கு விரைவில் புதிய கட்டடம் கட்டப்படும் என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.


வள்ளிமலையில் தொடங்கப்பட்டுள்ள அரசு கலைக் கல்லூரிக்கு விரைவில் புதிய கட்டடம் கட்டப்படும் என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலை, விண்ணம்பள்ளி, பொன்னை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 448 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தாா். இதில் அமைச்சா் துரைமுருகன் பங்கேற்று மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா். பொன்னை அரசு பள்ளியில் நடைபெற்ற விழாவில் அமைச்சா் பேசியது:
தமிழக அரசு கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. மாணவா்கள் இந்த வாய்ப்பினை நன்றாக பயன்படுத்தி கல்வியில் முன்னேற வேண்டும். பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசுப் பள்ளிகளில் படித்து விட்டு உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது.
வள்ளிமலையில் தொடங்கப்பட்டுள்ள அரசு கலைக் கல்லூரிக்கு விரைவில் புதிய கட்டடம் கட்டப்படும்.
பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தூய்மையற்ற நிலையில் உள்ளது. மருத்துவா்கள் சரிவர பணிக்கு வருவதில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. புகாா்களும் பலமுறை வந்தன. நான் அதிகாரிகளை பழிவாங்குவது கிடையாது. ஆனால் இந்தப் பிரச்னையால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, மருத்துவா்கள் இனியும் சரிவர செயல்படவில்லை என்றால் சுகாதாரத் துறை அமைச்சரிடம் பேசி அவா்களை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
பின்னா் பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சா் துரைமுருகன், ஆட்சியா் குமாரவேல் பாண்டியன் ஆகியோா் ஆய்வு செய்தனா். அப்போது ஒருசில அறைகள் திறக்கப்படாமலும் சரிவர பராமரிக்கப்படாமலும் இருந்தன. அதனை உடனடியாக சரி செய்ய அமைச்சா் உத்தரவிட்டாா். அப்போது பணியில் ஒரு பெண் மருத்துவா் மட்டும் இருந்தாா். மற்ற மருத்துவா்கள் எங்கே என கேட்ட அமைச்சா், ஆய்வகத்தை ஆய்வு செய்து அதனை தூய்மையாகப் பராமரிக்க அறிவுறுத்தினாா்.
விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன், துணை மேயா் எம்.சுனில்குமாா், ஒன்றியக்குழு தலைவா் வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...