தமிழ்நாட்டின் அனைத்துத் துறைகளும் நம்பர் ஒன் என்ற இலக்குகை அடையமுடியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் அனைத்துத் துறைகளும் நம்பர் ஒன் என்ற இலக்கை நிச்சயமாக அடையமுடியும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வா் ஸ்டாலின்
முதல்வா் ஸ்டாலின்

தமிழ்நாட்டின் அனைத்துத் துறைகளும் நம்பர் ஒன் என்ற இலக்கை நிச்சயமாக அடையமுடியும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு துறைச் செயலாளர்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:


* நிதி நெருக்கடியில் நாம் இருக்கிறோம் என்பது உண்மை தான். எனவே, எந்த திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவமும், முன்னுரிமையும் தர வேண்டுமோ அந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை விரைந்து வழங்கி அவற்றை செயலாக்கத்திற்கு கொண்டு வரவேண்டும்.

* எத்தனையோ திட்டங்களைத் தீட்டினாலும், முதலமைச்சரால், மற்றும் அமைச்சர்களால் அறிவிக்கப்படும் திட்டங்கள் அதிகமான கவனத்தைப் பெறும். அது இயற்கை தான். அப்படி கவனம் பெறும் திட்டங்களை உரிய காலத்தில் செயல்படுத்தி முடித்தாக வேண்டும்.

* குறிப்பிட்ட சில அரசுத் துறைகளின் செயல்பாடுகள் பொது வெளியிலும், சமூக ஊடகங்களாலும் விமர்சனம் செய்யப்பட்டது.

* இவற்றில் துறைச் செயலாளர்கள் இதுபோன்ற இனங்களில் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட வகையில் சிறப்பாக செயல்பட வேண்டும்.

* துறை ரீதியாக நான் உங்களோடு நேரடி தொடர்பில் இருக்கிறேன். அமைச்சர்கள் இருக்கிறார்கள். முதலமைச்சர் அலுவலகமும் உங்களோடு தொடர்பில் இருக்கிறது. சிறந்த ஒருங்கிணைப்பு இருக்கிறது.

* இதே போன்ற ஒருங்கிணைந்த செயல்பாடு உங்களுக்கும், உங்களுக்கு கீழேயுள்ள அதிகாரிகளுக்கும் இருக்கிறதா? என்றால் ஒருசில துறைகளில் இல்லை.

* அத்தகைய ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லாததால் தான் திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவதில் காலதாமதமும், தொய்வும் ஏற்படுகிறது.


* அனைத்துத் துறைச் செயலாளர்களும், திட்டங்களுக்கான ஆணைகளை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், கள அளவிலே அத்திட்டங்கள் கடைகோடியிலுள்ள பயனாளிகளையும் சென்றடைவதையும், உறுதி செய்யவேண்டும். இதற்காகவே, இந்த அரசு பொறுப்பேற்றவுடன், ஒவ்வொரு மாவட்டத்திற்கும், மூத்த I.A.S., அதிகாரிகளை கண்காணிப்பு அலுவலராக நியமித்துள்ளது. இவர்களுடைய செயல்பாடுகளை நம்முடைய தலைமைச் செயலாளர் அவர்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்து அவர்களுடைய பணியில் சிறக்கத்தக்க ஆலோசனைகளை அளித்து உதவிடுமாறு இந்தத் தருணத்தில் நான் கேட்டுக் கொள்கிறேன். 

* அமைச்சர்களுக்கும் துறை அதிகாரிகளுக்குமான ஒருங்கிணைந்த செயல்பாடு கூட சில துறைகளில், சில நேரங்களில் ஏற்படாமல் இருப்பதாகவும் நான் அறிகிறேன்.

* இது எங்கும், எப்போதும், எந்தத் துறையிலும் எந்த சூழலிலும் ஏற்படக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.

* மக்களுக்கும், ஆட்சி நிர்வாகத்துக்குமான தொடர்பும், அவர்களது அனுபவங்களும், அனைவராலும் மதிக்க வேண்டியது என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

* அதேபோல் மாவட்ட நிர்வாகத்துக்கும், துறைச் செயலாளர்களுக்குமான ஒருங்கிணைப்பும், ஒருங்கிணைந்த செயல்பாடும் நிச்சயம் அவசியம் ஆகும்.

* ஆட்சியில் இருப்பவர் இடும் கட்டளையைச் செயல்படுத்துபவர்களாக மட்டுமல்லாமல், மக்கள் நலன் கருதி நீங்கள் வைத்துள்ள, உங்களது கனவுத் திட்டங்களையும், அரசுக்குச் சொல்லி, அதனையும் செயல்படுத்த நீங்கள் முனைய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

* முதலமைச்சருடைய தகவல் பலகை (CM Dash Board) என்பது தரவுகளைக் கொண்டு முடிவுகளை மேற்கொள்ளும் நவீன நல் ஆளுமைக்கான வழிமுறைகளை உலக அளவில் தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நோக்கத்திற்காக, கடந்த 23.12.2021 அன்று முதலமைச்சரின் தகவல் பலகை ஒன்றை நான் துவக்கி வைத்தேன். இதில் ஒவ்வொரு துறையும், தங்கள் துறை சார்ந்த தரவுகளை பதிவேற்றம் செய்யுமாறு ஏற்கனவே நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். 

ஆனால் இன்னும் சில துறைகள் முதலமைச்சரின் தகவல் பலகையில் தரவுகளை பதிவு செய்வதில் முனைப்புக் காட்டவில்லை என்பது என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

இத்தகைய போக்கைத் தவிர்த்து, நல் ஆளுமையை இந்த அரசு வழங்குவதற்கு அனைத்துத் துறைகளும், தரவுகளை உடனுக்குடன் பதிவேற்றம் செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

* சிறப்பான நிர்வாகத்தை அளிப்பது இந்த அரசினுடைய முக்கிய நோக்கம்.

அந்த வகையில், இளம் வல்லுநர்களின் திறமையைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சரின் முத்தாய்ப்புத் திட்டம் (Tamil Nadu Chief Minister’s Fellowship Programme) என்ற உன்னதமான ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 30 இளம் வல்லுநர்கள், மூன்று கட்ட தேர்வுக்குப் பின்னர் இந்தத் திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சம்பந்தப்பட்ட துறைகள் அரசு நிர்வாகத்தைச் சிறப்பாக செம்மைப்படுத்தும் வகையில் பயன்படுத்த வேண்டும். அவர்கள் நேரிடையாக, முதலமைச்சர் அலுவலகத்தோடு தொடர்பில் இருப்பார்கள் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

* அமைச்சர்கள், துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட நிர்வாகம் ஆகிய நான்கும் ஒரே நேர்கோட்டில் செயல்பட்டால், நேர்கோட்டில் சென்றால், தமிழ்நாட்டின் அனைத்துத் துறைகளும் நம்பர் ஒன் என்ற இலக்கை நிச்சயமாக அடையமுடியும் என்று மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com