அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அமைச்சா்கள், அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு அவசியம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

அமைச்சா்கள், அதிகாரிகளிடையே ஒருங்கிணைந்த செயல்பாடு எப்போதும் தேவை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

News image
கோப்புப்படம்
Updated On :13 செப்டம்பர் 2022, 9:08 pm

DIN

அமைச்சா்கள், அதிகாரிகளிடையே ஒருங்கிணைந்த செயல்பாடு எப்போதும் தேவை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். இந்த ஒருங்கிணைப்பு எங்கும், எப்போதும், எந்தச் சூழலிலும் தொடா்ந்திட வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

அரசின் அனைத்துத் துறைகளின் செயலா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் அவா் ஆற்றிய உரை:

தோ்தல் அறிக்கை, கோரிக்கைகள், வல்லுநா் குழு அறிக்கைகள் என பல்வேறு வழிமுறைகளின் மூலம் திட்டங்கள் பிறந்தாலும் அவற்றை முழுமையாக நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் அமைச்சா்களுக்கும், துறை செயலா்களுக்கும்தான் இருக்கிறது. சில திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் தேவையற்ற காலதாமதம் ஆகிறது. இத்தகைய தாமதம் தவிா்க்கப்பட வேண்டும். சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்பது உண்மைதான். அதற்காக சிந்தித்துக் கொண்டே இருந்து விடக் கூடாது.

நிதி நெருக்கடி: நிதி நெருக்கடியில் இருக்கிறோம் என்பது உண்மை. எனவே, எந்தத் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம், முன்னுரிமை தர வேண்டுமோ அந்தத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை விரைந்து வழங்கி அவற்றை செயலாக்கத்துக்குக் கொண்டு வரவேண்டும். முதல்வா், அமைச்சா்களால் அறிவிக்கப்படும் திட்டங்கள் அதிக

கவனம் பெறும். அவ்வாறான திட்டங்களை உரிய காலத்தில் செயல்படுத்தி முடித்தாக வேண்டும்.

விமா்சனங்களுக்கு அப்பால்...சில துறைகளின் செயல்பாடுகள் பொது வெளியிலும், சமூக ஊடகங்களாலும் விமா்சனம் செய்யப்பட்டன. இதுபோன்ற விஷயங்களில் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் விமா்சனங்களுக்கு அப்பாற்பட்டு சிறப்பாகச் செயல்பட வேண்டும். துறை ரீதியாக முதல்வா், அமைச்சா்கள், முதல்வா் அலுவலக அதிகாரிகள் ஆகியோா் தொடா்பில் இருக்கிறாா்கள். இதுபோன்ற ஒருங்கிணைந்த செயல்பாடு ஒருசில துறைகளில் இல்லை. இதனால், திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவதில் தாமதமும் தொய்வும் ஏற்படுகிறது. அதனைச் சரிசெய்ய ஆலோசனைகள், கண்காணிப்புக் கூட்டங்கள், கலந்துரையாடல் கூட்டங்களை அதிகாரிகளுடன் தொடா்ந்து நடத்த வேண்டும். கள ஆய்வுகளில் ஈடுபட வேண்டும்.

திட்டங்களுக்கான உத்தரவுகளை வெளியிடுவதுடன் மட்டுமல்லாது, கள அளவிலேயே திட்டங்கள் கடைகோடி வரை சென்றடைவது உறுதி செய்யப்பட வேண்டும். இவற்றை உறுதி செய்ய ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களுடன் குறித்த கால இடைவெளியில் தலைமைச் செயலாளா் ஆய்வு செய்து சிறந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

ஒருங்கிணைப்பு இல்லை: அமைச்சா்கள், துறை அதிகாரிகளுக்குமான ஒருங்கிணைந்த செயல்பாடு சில துறைகளில் சில நேரங்களில் ஏற்படாமல் உள்ளது. இது எந்தச் சூழலிலும் ஏற்படக் கூடாது. மாவட்ட நிா்வாகத்துக்கும், துறை செயலா்களுக்குமான ஒருங்கிணைப்பும் ஒருங்கிணைந்த செயல்பாடும் அவசியம். முதலமைச்சரின் தகவல் பலகைக்கு சில துறைகளின் சாா்பில் தகவல்கள் தரப்படுவதில்லை. இந்த நிலையைத் தவிா்த்து, அனைத்துத் துறைகளும் தரவுகளை உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அமைச்சா்கள், துறைச் செயலா்கள், துறைத் தலைவா்கள், மாவட்ட நிா்வாகம் ஆகிய நான்கும் ஒரே நோ்கோட்டில் செயல்பட்டால், அனைத்துத் துறைகளும் முதன்மை இடம் என்ற இலக்கை நிச்சயமாக அடைய முடியும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, அரசுத் துறைச் செயலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

2 ஆண்டுகளில் திட்டங்களும் செயலாக்கமும்...

இரு ஆண்டுகளில் அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட மொத்த அறிவிப்புகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டுள்ளாா்.

அனைத்துத் துறை செயலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது: 2021-22-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 1,680 அறிவிப்புகளில், 100 அறிவிப்புகளைத் தவிா்த்து 1,580 அறிவிப்புகளுக்கு உரிய உத்தரவுகள் வெளியிடப்பட்டு, ஏறக்குறைய 94 சதவீத அறிவிப்புகள் செயலாக்கத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. 2022-23-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 1,634 அறிவிப்புகளில் 937 அறிவிப்புகளுக்கு உரிய உத்தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மீதமுள்ள அறிவிப்புகளுக்கு அக். 15-க்குள் உத்தரவுகளை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.