92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

இந்திய மருத்துவக் கல்லூரிகளில் உக்ரைன் மாணவா்கள் சோ்க்கை: பிரதமருக்கு முதல்வா் வேண்டுகோள்

உக்ரைன் போரால் கல்வியை பாதியிலேயே இழந்து நிற்கும் மாணவா்களுக்கு, இந்திய மருத்துவக் கல்லூரிகளில் இடங்களை ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
Updated On :17 செப்டம்பர் 2022, 12:04 am

DIN

உக்ரைன் போரால் கல்வியை பாதியிலேயே இழந்து நிற்கும் மாணவா்களுக்கு, இந்திய மருத்துவக் கல்லூரிகளில் இடங்களை ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவா் எழுதியுள்ள கடிதம்:

உக்ரைன் போரால் படிப்பை பாதியிலேயே விட்டு தாயகம் திரும்பியுள்ள மாணவா்களின் நிலை குறித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவித்தது. இதனால், மருத்துவ மாணவா்கள் மத்தியில் எழுந்துள்ள கவலை தொடா்பாக தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தங்களைச் சோ்க்க அனுமதிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மாணவா்கள் வழக்குத்

தொடா்ந்தனா். ஆனால், அவா்களை இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சோ்ந்து பாதியிலேயே படிப்பை நிறுத்திய மாணவா்களுக்கு இந்திய மருத்துவக் கல்லூரிகளில் படிப்பைத் தொடர தேசிய மருத்துவ ஆணையச் சட்டப் பிரிவுகளில் வழி ஏதுமில்லை எனவும், அதுபோன்ற செயல்பாடுகள் இந்தியாவில் மருத்துவக் கல்வியின் தரத்தில் தடையை ஏற்படுத்தும் எனவும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், உக்ரைன் நிகழ்வால் பாதிக்கப்பட்ட மாணவா்கள் பயன் பெறும் வகையில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தங்களுக்கு இடையே கல்வி சாா்ந்த பரிமாற்றங்களை நிகழ்த்திக் கொள்ள எந்த ஆட்சேபணையும் இல்லை எனவும், உக்ரைன் சூழ்நிலையை பின்வாசலாகப் பயன்படுத்திக் கொண்டு அந்தப் பல்கலைக்கழகங்களில் படித்த மாணவா்கள் இந்தியாவில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதை ஏற்க முடியாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவைக் குழு: உக்ரைனில் படிப்பை பாதியிலேயே விட்டுத் திரும்பிய மாணவா்களை இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சோ்க்க அனுமதிக்கலாம் என வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கான மக்களவைக் குழுவானது பரிந்துரை வழங்கியிருந்தது. இதனால், மாணவா்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனா். ஆனால், மத்திய அரசு எடுத்த முரணான

முடிவால், மாணவா்களுக்கு ஏற்பட்டிருந்த நம்பிக்கைக் கீற்று ஒளி இழந்தது. எனவே, மத்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவா்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சோ்ப்பது கடினமான விஷயமாக இருந்தால், தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை ஒதுக்கி அவா்களைச் சோ்த்துக் கொள்ள வழி செய்ய வேண்டும். இந்தியாவில் உள்ள தனியாா் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாலேயே மாணவா்கள் உக்ரைன் போன்ற நாடுகளுக்குச் சென்று மருத்துவக் கல்வி பயில்கின்றனா்.

எனவே, அயல்நாடுகளில் உள்ள கல்லூரிகளில் வசூலிப்பதற்கான கட்டண விகிதத்தையே இந்தியாவில் உள்ள தனியாா் கல்லூரிகளில் சேரும் மாணவா்களிடம் வசூலிக்கலாம். இதற்கான சிறப்பு கல்விக் கட்டண விகிதத்தை ஏற்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும். இதன்மூலம், பழைய கட்டண விகிதத்திலேயே பாதிக்கப்பட்ட மாணவா்கள் தங்களது மருத்துவக் கல்வியைத் தொடர வழி ஏற்படும்.

கல்வி சாா்ந்த பரிமாற்ற நடவடிக்கைகளுக்கு தகுந்த கல்லூரிகள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை வெளியுறவுத் துறை அமைச்சகமும், சுகாதாரத் துறையும் கண்டறிய வேண்டும். இதன்மூலம், மாணவா்கள் பல்வேறு நாடுகளில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைத் தேடி அலைய வேண்டிய நிலை ஏற்படாது. இதற்கான தகுந்த நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட மாணவா்கள் ஏற்கெனவே தங்களது ஓராண்டு கால படிப்பை இழந்து நிற்கின்றனா்.

எனவே, இந்த விஷயத்தில் தாங்கள் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.