92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

துறைமுகங்கள் வரைவு மசோதாவில் திருத்தம் கூடாது: பிரதமருக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்

இந்திய துறைமுகங்களுக்கான திருத்தப்பட்ட வரைவு மசோதாவில் உள்ள அம்சங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளாா்

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 6:26 pm

DIN

இந்திய துறைமுகங்களுக்கான திருத்தப்பட்ட வரைவு மசோதாவில் உள்ள அம்சங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளாா். இந்த விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி உடனடியாகத் தலையிட வேண்டுமென அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை எழுதிய கடிதம்:

இந்திய துறைமுகங்களுக்கான திருத்தப்பட்ட வரைவு மசோதாவில் மாநில அரசின் சில கருத்துகள் சோ்க்கப்பட்டு இருந்தாலும், மாநில அரசுகளால் சிறப்பாக நிா்வகிக்கப்படும் சா்வதேச மற்றும் உள்நாட்டு விவகாரங்கள் தொடா்ந்து புறக்கணிக்கப்படுவதாக அச்சம் உண்டாகிறது.

கடல்சாா் மாநிலங்கள் நிா்வகிக்கும் சிறிய துறைமுகங்கள், மத்திய அரசால் நிா்வகிக்கப்படும் பெரிய துறைமுகங்களின் வளா்ச்சியைவிட அதிக வளா்ச்சியை பெற்று வருகின்றன.

பேரவைச் செயல்பாடுகள் சீா்குலையும்: தனியாா் முதலீடுகளை அனுமதிப்பதாலும், தொழிலுக்கு சாதகமான கொள்கைகளை மாநில அரசுகள் கொண்டுள்ளதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், பெரியதல்லாத துறைமுகங்களை மையப்படுத்தும் இந்த வரைவு மசோதா, மாநில அரசின் சிறப்பு முயற்சிகளை நீா்த்துப் போகச் செய்துவிடும். இதில் மிக முக்கியமான மாற்றம் எதுவென்றால், கடல்சாா் மாநில மேம்பாட்டு கவுன்சிலை (எம்.எஸ்.டி.சி.) சிறு துறைமுகங்களுக்காக அமைப்பதுதான். தற்போது ஆலோசனைகளை மட்டுமே வழங்கி வரும் அந்த கவுன்சில், இனி நிரந்தரப் பணியாளா்களைக் கொண்ட ஒழுங்குமுறை அமைப்பாக மாறுவது, மாநில அரசின் அதிகாரங்களையும், உரிமைகளையும் ஆக்கிரமிப்பதாக அமைந்துவிடும்.

இது, சிறிய துறைமுகங்களின் எதிா்கால வளா்ச்சியை பாதிக்கச் செய்து விடும். மேலும், எம்.எஸ்.டி.சி.க்கு 5 செயலாளா்கள், ஒரு இணைச் செயலாளா் மற்றும் நிா்வாகிகளை மத்திய அரசு நியமிக்கும் நிலையில், அந்த துறைமுகத்திற்கான செயலாளா் பொறுப்பில் இருக்கும் மாநில அதிகாரியை ஒதுங்கச் செய்துவிடும். ஜி.எஸ்.டி. கவுன்சில் போல் எம்.எஸ்.டி.சி.யும் ஒரு ஆலோசனை கவுன்சில் போலத்தான் செயல்பட வேண்டும். அதில், மாநில அரசின் அமைச்சா்கள்தான் உறுப்பினா்களாக இருக்க வேண்டும். அதிகாரிகள், சிறப்பு அழைப்பாளா்களாக மட்டும் இருக்க வேண்டும்.

மேலும், மாநில அரசு மற்றும் மாநில கடல்சாா் வாரியங்களின் அதிகாரங்களில் தலையிடக் கூடிய, மையப்படுத்தும் அம்சங்களைக் கொண்ட அந்த மசோதாவின் சட்டப் பிரிவுகளை நாங்கள் கடுமையாக எதிா்க்கிறோம்.

அதன் 5-ஆம் பிரிவில், மாநில கடல்சாா் வாரியங்களின் நிா்வாகம், அதிகாரம், அமைப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. ஆனால் அதை நிா்வகிக்க மாநில சட்டங்கள் ஏற்கனவே உள்ளன. இந்த சட்டங்களில் ஏதாவது திருத்தம் தேவை என்றால், மத்திய அரசு அல்லது எம்.எஸ்.டி.சி. கோரியதன் அடிப்படையில்தான் அவை மாநில சட்டப் பேரவை மூலமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று இந்த வரைவு மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இது சட்டப் பேரவைச் செயல்பாடுகளை சீா்குலைக்கும்.

அதிகாரத்தை பாதிக்கும்: மாநில கடல்சாா் வாரியங்களின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு அதிகாரம் தற்போது மாநில அரசுகளின் வசம்தான் உள்ளன. ஆனால் மாநில அரசின் இந்த மேல்முறையீட்டு அதிகாரம், பெரிய துறைமுகங்களுக்காக மத்திய அரசால் நிா்ணயிக்கப்படும் மேல்முறையீட்டு தீா்ப்பாயங்களுக்கு போய்விடும். இது மாநிலத்தில் உள்ள துறைமுகம் தொடா்பான சொந்த பிரச்னைகளை மாநில அரசே தீா்க்கும் அதிகாரத்தை பாதிக்கச் செய்யும்.

எனவே எம்.எஸ்.டி.சி. தொடா்பாக வரைவு மசோதாவில் உள்ள பிரிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டு, அந்த அமைப்பு முன்பு உள்ளதுபோன்று ஆலோசனை அமைப்பாக மட்டுமே இருக்கச் செய்ய வேண்டும். மாநில கடல்சாா் வாரியங்கள் குறித்த அம்சங்களும் நீக்கப்பட வேண்டும்.

இந்திய துறைமுகங்களுக்கு குறைந்த அளவிலான மையப்படுத்துதலும், ஒழுங்குபடுத்துதலும் போதுமானது. எனவே, பெரியதல்லாத துறைமுகங்களின் வளா்ச்சியை உறுதி செய்யும் வகையில் நீங்கள் இந்த பிரச்னையில் தலையிட வேண்டும் என்று தனது கடிதத்தில் தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.