
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே 15 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து கர்ப்பமாக்கியவருக்கு, ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 2.51 லட்சம் அபராதம் விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கவரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேலு (46). இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இதை யாரிடமாவது சொன்னால் சிறுமியின் குடும்பத்தை கொன்று விடுவேன் என்று மிரட்டி, தொடர்ந்து பல முறை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரிடம் விசாரித்த போது இவை தெரியவந்தன. அத்துடன் அச்சிறுமி கருவுற்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதற்கிடையில் அந்த சிறுமியின் கரு கலைந்துள்ளது. போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த விராலிமலை காவல் நிலைய காவலர்கள், குழந்தை வேலுவை கைது செய்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் நிறைவில் நீதிபதி ஆர். சத்யா வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.
இதையும் படிக்க: அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்
குற்றவாளி குழந்தை வேலுவுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் மற்றும் ரூ. 2.51 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 7.50 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.