

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில், இறந்த உடலை பாதை இல்லாததால், சகதியில் எடுத்துச் செல்லப்பட்டது.
ஒரு மனிதனுக்கு பிறப்பு என்று இருந்தால், நிச்சயமாக அவனுக்கு இறப்பு என்பது இருந்தே தீரும். அந்த இறப்பு நிகழ்ந்த பிறகு, இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, நல்லடக்கம் செய்யப்படுவதில் குறைகள் இருந்தால், உலகை விட்டுப் போன பிறகும், துர்ப்பாக்கிய நிலைதான்.
கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட, கூத்தாநல்லூர் - திருவாரூர் பிரதான சாலையின் ஓரத்தில் சுடுகாடு அமைந்துள்ளது. இந்தச் சுடுகாடு, லெட்சுமாங்குடி மேலத்தெரு, கீழத் தெருவைச் சேர்ந்த சுமார் 70 குடும்பங்களைச் சேர்ந்த ஆதிதிராவிடர்களுக்கானது. மயானத்திற்கு இறந்த உடலை எடுத்துச் செல்ல வழியில்லாமல், பெரும் அல்லல் படுகிறார்கள். மேலும், கருவேல மரங்களும், முட்புதர்களும் மண்டியுள்ளது.
கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக மயானத்திற்குச் செல்வதற்கு சாலை வசதி இல்லாமல், குண்டும் குழியுமாக, சேறும் சகதியுமாக உள்ளது. இதுகுறித்து 5ஆவது வார்டு நகரமன்ற உறுப்பினர் துரைமுருகன் கூறியது. இறந்தவர்களின் உடலை இங்குள்ள மயானத்திற்கு எடுத்துச் செல்வதற்கு பல ஆண்டுகளாக சாலை வசதியில்லாமல் சிரமப்படுகிறோம்.
திங்கள்கிழமை, லெட்சுமாங்குடி கீழத்தெருவைச் சேர்ந்த 69 வயது மூதாட்டியின் பிரேதத்தை எடுத்துச் செல்ல முடியாமல், சேறும், சகதியுமான சாலையில் எடுத்துச் சென்றோம். உடனே நகராட்சி நிர்வாகம் மயானத்துக்கு சாலை அமைத்துத்தர வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.