புதிய நீதிமன்றக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினார் என்.வி. ரமணா

நீதிமன்றக் கட்டடங்கள் அடிக்கல் நாட்டுதல் மற்றும் திறப்பு விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.
புதிய நீதிமன்றக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினார் என்.வி. ரமணா
புதிய நீதிமன்றக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினார் என்.வி. ரமணா

சென்னை: சென்னையில் ரூ.20.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 9 அடுக்குகள் கொண்ட நீதிமன்றக் கட்டடம் மற்றும் ரூ.22.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நீதிமன்றக் கட்டடங்கள் அடிக்கல் நாட்டுதல் மற்றும் திறப்பு விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், பொதுமக்களுக்கு விரைந்து நீதி வழங்குதலை உறுதி செய்யும் வகையில் நீதிமன்றங்களுக்குத் தேவையான கட்டட வசதி, மனித ஆற்றல், பிற உட்கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து செய்து கொடுப்பதில் தமிழ்நாடு அரசு எப்பொழுதும் உறுதியாக உள்ளது. அந்த வகையில் இன்று  சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்றக் கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டுதல் மற்றும் திறப்பு விழா நடைபெற்றது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, சென்னை உயர்நீதிமன்றத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு இடவசதி வழங்கும் பொருட்டு, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் 20 கோடியே 24 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 9 அடுக்குகள் கொண்ட நீதிமன்றக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் 8 கோடியே 77 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள்; நாமக்கல் மாவட்டம், பரமத்தியில் 11 கோடியே 93 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள்; என மொத்தம் 20 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நீதிமன்றக் கட்டடங்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா திறந்து வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை, எழும்பூரில், வணிக சம்பந்தமான வழக்குகளை விசாரிப்பதற்கென 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வணிக நீதிமன்றத்திற்கான கட்டடத்தை திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு வழக்கறிஞர் நலநிதியத்திலிருந்து உயிரிழந்த 467 வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக 5 வழக்கறிஞர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா 7 இலட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 35 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை நிதியுதவியாக வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற நீதிபதி வி.இராமசுப்பிரமணியன், நீதிபதி எம்.எம். சுந்தரேஷ், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி, சட்டத்துறை அமைச்சர் எஸ். இரகுபதி, அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ். அமல்ராஜ், இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் எஸ். பிரபாகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com