தஞ்சை அருகே தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலி

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில்  11 பேர் உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான தேரை ஆய்வு செய்யும் அதிகாரிகள்
விபத்துக்குள்ளான தேரை ஆய்வு செய்யும் அதிகாரிகள்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில்  11 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தஞ்சாவூர் - பூதலூர் சாலையில் 4 கி.மீ. தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் மடம் அமைக்கப்பட்டது.

இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி 94 ஆம் ஆண்டாக மூன்று நாள் அப்பர் சதய விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வெகு விமரிசையாக நடைபெற்று வந்த இத்திருவிழாவில் இரவில் மின் அலங்கார தேர் புறப்பாடு தொடங்கியது. இதில் அப்பர் படம் வைத்து இழுத்து வரப்பட்டது.

தொடர்ந்து களிமேடு கிராமத்திலுள்ள நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது. வீட்டுக்கு வீடு தேங்காய் பழம்  வைத்து படையல் செய்து வழிபட்டனர்.  புதன்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் கீழத் தெருவிலிருந்து முதன்மைச் சாலைக்கு வந்த இத்தேர் திருப்பத்தில் திரும்பியபோது, மேலே சுமார் 30 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின் பாதையில் தேரின் அலங்கார தட்டி உரசியது.

இதனால் தேரை இழுத்து வந்த மக்கள் மீதும், சுற்றி இருந்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இவர்களில் களிமேடு கிராமத்தைச் சேர்ந்த எம். மோகன் (22), முன்னாள் ராணுவ வீரர் கே. பிரதாப் (36), ஏ. அன்பழகன் (60), இவரது மகன் ராகவன் (24), நாகராஜ் (60), ஆர். சந்தோஷ் (15), டி. செல்வம் (56), எம். ராஜ்குமார் (14), ஆர். சாமிநாதன் (56), ஏ. கோவிந்தராஜ் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் பலத்த காயமடைந்த எம். ரவிச்சந்திரன் (48), ஆர். கலியமூர்த்தி (40), கே. ஹரிஷ் ராம்  (10), எம். நித்தீஷ் ராம் (13), ஏ. மாதவன் (22), டி. மோகன் (54), என். விஜய் (23), எம். அரசு (19), ஜி. விக்கி (21), திருஞானம் (36), வி. ஹரிஷ் (11), மதன் மனைவி சுகுந்தா (33), பி. கௌசிக் (13), எஸ். பரணி (13) ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் பரணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார் மேலும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதையடுத்து களிமேடு கிராமத்திற்கு சென்ற இடத்தை பார்வையிட்டார்.

இதேபோல தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஏ. கயல்விழி,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா கந்தபுனேனி உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் தேர் நிலைக்கு வருவதற்கு 15 நிமிடங்கள் இருந்த நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது. தேர் வரும் வழியில் தண்ணீர் ஊற்றப்பட்டு வந்ததால் மின்சாரம் பாய்ந்தபோது பாதிப்பு அதிகமாகி விட்டது என தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com