கருணாநிதி நினைவு பேனா சிலைக்கு கடலால் என்ன சிக்கல்?

சென்னையில் மெரினா கடற்கரையையொட்டி, கடல் பகுதியில், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவாக பேனா சிலை அமைக்கத் திட்டமிட்டுள்ள இடம் அதிக அளவில் மணல் கு
கருணாநிதி நினைவு பேனா சிலைக்கு கடலால் என்ன சிக்கல்?


சென்னையில் மெரினா கடற்கரையையொட்டி, கடல் பகுதியில், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவாக பேனா சிலை அமைக்கத் திட்டமிட்டுள்ள இடம் அதிக அளவில் மணல் குவியும் பகுதி என்பதால் கட்டுமானத்தை பாதிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

1990 - 2016 காலகட்டத்தின் கடலோர மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, இந்தியக் கடலோரப் பகுதி மாற்றங்கள் பற்றி ஆய்வு மேற்கொண்ட சென்னையிலுள்ள தேசிய கடலோர ஆராய்ச்சி மையத் தகவல்படி, மிக அதிகளவில் மணல் குவியும் பகுதியில் மெரினா இடம் பெறுகிறது.

இந்நிலையில், சில வாரங்களுக்கு முன் மெரினாவில் உள்ள கூவம் முகத்துவாரத்தை ஆராய்ந்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு, சுற்றுச்சூழல் மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆற்றின் முகத்துவாரத்தில் நிலையான தடுப்புச்சுவரை அமைக்க  கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதியை பரிந்துரைத்தது.

ஆனால், கூவம் ஆற்றின் முகத்துவாரத்தின் இருபுறமும் நீர்வளத்துறை தடுப்புச்சுவரைக் கட்டினால், இந்த நீர்வரத்து விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

மேலும் ஆவணங்களின்படி, கடலில் கலக்கும் கூவம் ஆற்றின் முகப்பில் கட்டப்பட இருக்கும் 310 மீட்டர் அளவுள்ள தெற்கு பகுதி தடுப்புச்சுவர்  புதிதாக அமையவுள்ள பேனா நினைவுச் சிலையிலிருந்து 100 மீட்டருக்கும் குறைவாக உள்ளது. தடுப்புச் சுவர் போன்ற கடினமான அமைப்புகளில் அதன் வடக்குப் பகுதியில் தூண்டப்படும் மணல் அரிப்புகள் தெற்குப் பக்கத்தில் பெருக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 

அப்படி சென்னை துறைமுகத்தின் கடல்நீர் தடுப்பரண்களால்(breakwater) ஏற்பட்ட மணல் குவியலில் உருமாறியதே மெரினா.

இதுகுறித்துக் குறிப்பிட்ட பூவுலகின் நண்பர்கள் அமைப்பின்  ஜி. சுந்தர்ராஜன், "முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவிடத்திலிருந்து பேனா சிலைக்குச் செல்ல 650 மீட்டர் நடைப் பாலம் (இதில் 360 மீட்டர் கண்ணாடித் தளம் கொண்டது) அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதிக அளவில் மணல் குவியும் இந்தப் பகுதியில் அமையும் இந்தப் பாலம் ஒருகாலகட்டத்தில் மணலால் முழுமையாக மூடப்படும் அபாயம் இருக்கிறது. கூவம் கரையோர முகப்புப் பகுதித் தடுப்புச் சுவரும் அமையும்போது மணல் குவியும் வேகம் அதிகரிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

அதே நேரம், முன்மொழியப்பட்ட தடுப்புச்சுவர்கள் வடிவமைப்பில் வளைந்திருப்பதாகவும் இது தெற்குப் பகுதியில் மணல் திரட்டல் விகிதத்தைக் குறைக்கும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இதற்கிடையில், சிலை அமைக்கும் இடத்தை இறுதி செய்வதற்கு முன் விரிவான கண்காணிப்பும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்த திட்டத்தால் அருகில் உள்ள வேறு எந்த நடவடிக்கைகளுக்கும் இடையூறு ஏற்படாது என்றுதுடன் சிலையை அமைக்க மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் (SCZMA) அனுமதி பெற்ற பொதுப்பணித்துறை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்தும் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.

ஆனால், கூவம் ஆற்றின் முகத்துவாரத்திற்கும் அடையாறு முகத்துவாரத்திற்கும் இடையே உள்ள 14 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தங்களின் பாரம்பரியம் மற்றும்  மீன்பிடி தளங்கள் இத்திட்டத்தால் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், தென்னிந்திய மீனவர் நலச் சங்கத் தலைவர் கே.பாரதி இதுகுறித்து கூறியதாவது:

14 கிராமங்களின்  மீனவர் தலைவர்களின் கையொப்பத்துடன் விரிவான பிரதிநிதித்துவம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில், மாட்டுக்குப்பம், அயோத்திகுப்பம், நடுக்குப்பம் மற்றும் நொச்சிக்குப்பம் ஆகியவை பேனா நினைவுச் சின்னத்திற்காக ஒதுக்கப்பட்ட பகுதியின் கடல்நீரைத்தான் நேரடியாக நம்பியுள்ளன. இந்தப் பகுதி சேற்றுக் கடற்பரப்பு என்பதால் இங்கேதான் இறால்களும் நண்டுகளும் முட்டையிட்டுப் பெருகுகின்றன. 

மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல் கொண்ட திட்டங்கள் குறித்து கடிதம் மூலம் விளக்கங்களைக் கேட்போம் என்றும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com