'என்னதான் கதறினாலும் கருணாநிதி புகழை மறைக்க முடியாது': முதல்வர் ஸ்டாலின்

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி கட்சியின் தொண்டர்களுக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி கட்சியின் தொண்டர்களுக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவு நாளையொட்டி ஆகஸ்ட் 7ஆம் தேதி சென்னையில் அமைதிப் பேரணி நடத்தப்படவுள்ளது.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில்,

நம் இதயத்துடிப்பாக விளங்கி, இயக்கத்தை  எப்போதும் வழி நடத்துவதற்கும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை முறையாகச் செயல்படுத்துவதற்கும் முழுப் பேராற்றலாக விளங்கும் கருணாநிதிக்கு ஆகஸ்ட் 7 அன்று நான்காம் ஆண்டு நினைவு நாள்.

அண்ணா மறைந்தபிறகு, ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளான பிப்ரவரி 3 அன்று சென்னை கடற்கரையில் உள்ள நினைவிடத்திற்கு திமுக சார்பில் பெருந்திரளான தொண்டர்கள் பங்கேற்புடன் அமைதிப் பேரணி நடத்தி அதனை வழிநடத்திச் செல்வது கருணாநிதியின் வழக்கம். ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் இதனை கருணாநிதி கடைப்பிடித்தார்.

அண்ணா வழியில் அன்றாடம் பயணித்த கருணாநிதியின் நினைவைப் போற்றும் வகையில், கருணாநிதி நினைவிடத்திற்கு அவரது முதலாமாண்டு நினைவு நாளில் உங்களில் ஒருவனான எனது தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. அதற்கடுத்த இரண்டாண்டுகளில் கரோனா கால நடைமுறைகள் காரணமாக நினைவு நாளில் அமைதிப் பேரணி நடத்திட வாய்ப்பில்லாமலே போய்விட்டது.

கருணாநிதியால் ‘அண்ணா சாலை’ எனப் பெயர் சூட்டப்பட்ட சாலையில் பெரியார் - அண்ணா ஆகிய இருவரின் சிலைகளும் அமைந்துள்ள பகுதியில், கருணாநிதிக்கு பெரியார் - அண்ணா சிலைகளுக்கு நடுவே சிலை அமைக்கப்பட்டுள்ளது.

ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள அந்தத் திருவுருவச் சிலையிலிருந்து தொடங்கி, கருணாநிதி நினைவிடம் வரை ஆகஸ்ட் 7 அன்று அமைதிப் பேரணி நடைபெற இருக்கிறது.  திமுக தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான என் தலைமையில் நடைபெறும் பேரணியில் கட்சியின் பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட கட்சி முன்னணியினரும், தொண்டர்களும் பெருந்திரளாகப் பங்கேற்க இருப்பதை சென்னை கிழக்கு, சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு மாவட்டக் கட்சிச் செயலாளர்கள் இணைந்து அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்கள்.

கருணாநிதி திருவுருவச் சிலை அமைந்துள்ள ஊர்களில் கட்சியினர் மாலை அணிவித்து, அமைதி ஊர்வலம் நடத்திடலாம். இனிமேல் சிலை அமையவிருக்கும் ஊர்களில், கட்சி அலுவலகத்தில் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் புகழ் வணக்கம் செலுத்திடலாம்.

தமிழினத்தின் எதிரிகளும், அந்த எதிரிகளுக்கு நேரடியாகவும் - மறைமுகமாகவும் விலை போகும் கூலிகளும் என்னதான் கதறினாலும் கருணாநிதி புகழினை சிறிதும் மறைத்திட முடியாது என்பதை உணர்த்தும் வகையில் நினைவேந்தல் நிகழ்வுகள் அமையட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com