
புதுச்சேரி சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் தனது மகன் திலகரசர் காணவில்லை என போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் திலகரசரைத் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம், திருபுவனை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அங்காளன்(52). இவர், புதுச்சேரி அருகே திருக்கனூர் செல்லிப்பட்டு புதுகாலனி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவரது மகன் திலகரசர் (28). திருமணமாகாத நிலையில் வீட்டிலிருந்தவர், வியாழக்கிழமை பகல் 11 மணியளவில் வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் கவலையடைந்த எம்.எல்.ஏ. அங்காளன் மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதையும் படிக்க | நீலகிரி மாவட்டத்தில் கனமழை: கேரளம் மாநிலத்திற்கு இரவு நேர போக்குவரத்து தடை
இந்த நிலையில், திலகரசர் எழுதிய கடிதம் வீட்டில் சிக்கியது. அதில், வீட்டை விட்டு தனது தாயிடம் செல்வதாக எழுதப்பட்டு இருந்ததாம்.
இது தொடர்பாக திருக்கனூர் போலீசில் அங்காளன் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து, காணாமல் போன திலகரசரைத் தேடி வருகின்றனர்.