மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு! வெள்ளநீர் வடியத் தொடங்கியது!

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 1,77,000 கனஅடியாக நீடிக்கிறது.
மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு! வெள்ளநீர் வடியத் தொடங்கியது!

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 1,77,000 கனஅடியாக நீடிக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலத்தில் வயநாட்டிலும் பெய்துவரும் கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கவே அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.

காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மளமளவென அதிகரித்தது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து ஜூலை 7 ஆம் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாகவும் ஜூலை 16 ஆம் தேதி 120 அடியாகவும் உயர்ந்து அணை நிரம்பியது.

கனமழை நீடித்ததால் மேட்டூர் அணையிலிருந்து வெள்ளநீர் வெறியேற்றப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நடப்பு ஆண்டில் அதிகபட்சமாக அணைக்கு வினாடிக்கு 2,10,000 கனஅடிவரை நீர் வரத்து அதிகரித்து வந்தது.

நீர் பிடிப்பு பகுதிகளில் மழை சற்று தணிந்ததால் நேற்று நீர்வரத்து வினாடிக்கு 1,81,000 கனஅடியாக சரிந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 1,80,000 கனஅடி வீதம் வெள்ளநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  இன்று காலை நீர்வரத்து 1,77,000 கனஅடியாக சரிந்தது.

மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் வெள்ளநீர் திறப்பு குறைக்கப்பட்தால் வெள்ளம் புகுந்த பகுதிகளில் வெள்ளநீர் வடியத் தொடங்கியது.

இன்று காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120.04 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,77,000 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 1,80,000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணை மின்நிலையம், சுரங்க மின்நிலையக்கள் வழியாக வினாடிக்கு 23,000 கனஅடி நீரும் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் மூலம் வினாடிக்கு 1,57,000 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.55 டி.எம்.சியாக உள்ளது.

இன்று நான்காவது நாளாக கோட்டையூர், பண்ணவாடி, செட்டிபட்டி பரிசல் துறைகளில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மீனவர்கள் நான்காவது நாளாக காவிரியில் மீன் பிடிக்கச் செல்லவில்லை. மீனவர்கள் தங்கள் முகாம்களில் முடங்கியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com