மாண்டஸ் புயல்: சென்னையில் 2வது நாளாக விமான சேவை பாதிப்பு!

சென்னையில் மாண்டஸ் புயல் காரணமாக இரண்டாவது நாளாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. 
மாண்டஸ் புயல்: சென்னையில் 2வது நாளாக விமான சேவை பாதிப்பு!


சென்னையில் மாண்டஸ் புயல் காரணமாக இரண்டாவது நாளாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. 

அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக வலுப்பெற்று பின்னர் புயலாக வலுவிழந்து வெள்ளிகக்கிழமை 10 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கியது.

சுமார் 5 மணிநேரத்திற்கு பிறகு சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இன்று காலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருக்கும் மாண்டஸ் புயல் பின்னர் படிப்படியாக வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை கடந்த போது சென்னை மற்றும் வடகடலோர மாவட்டங்களில் 75 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசியது.

புயலால் சேதமடைந்த பகுதிகளை கண்டறிந்து பேரிடர் மற்றும் பிற குழுக்கள் அனுப்பப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

தொடர்ந்து வட உள்தமிழக மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை திருச்சி, மதுரை, தூத்துக்குடி, மைசூரு, கோழிக்கோடு, விஜயவாடா, பெங்களூரு, ஹைதராபாத், ஹூப்ளி, கண்ணூா் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் 25 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், ஏா் ஏசியா விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சென்னை விமான நிலைய ஓடுதளத்தில் மழைநீர் தேங்கியதால், பராமரிப்பு பணி காரணமாக விமான ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் 4 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னையில் இரண்டாவது நாளாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், புயல் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 11 விமானங்கள் மற்றும் சென்னை வரும் 8 விமானங்கள் உள்பட 19 விமானங்களின் சேவை சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com