இடைக்கால பொதுச்செயலராக இபிஎஸ்ஸை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்?

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி பெயரில் தாக்கல் செய்யப்பட்ட வரவுசெலவு கணக்கை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இடைக்கால பொதுச்செயலராக இபிஎஸ்ஸை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்?

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி பெயரில் தாக்கல் செய்யப்பட்ட வரவுசெலவு கணக்கை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அதிமுகவில் இரட்டைத் தலைமை பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அந்த பொதுக்குழுவிலேயே ஒருங்கிணைப்பாளர் பதவி காலவதியாகி விட்டதாக அறிவிக்கப்பட்டதுடன், ஓ.பன்னீர்செல்வத்தில் பொருளாளர் பதவியும் பறிக்கப்பட்டது.

கட்சியின் உரிமை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததை அடுத்து, ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தற்போது நடைபெற்று வருகின்றது.

மேலும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொதுக்குழு தீர்மானங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சமர்பிக்கப்பட்ட நிலையில், தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று ஓபிஎஸ் தரப்பிலும் தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி இடைக்கால பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமியின் கடிதத்தில் 2021-22-ஆம் ஆண்டிற்கான அதிமுக வரவு செலவு கணக்கு தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வரவுசெலவு கணக்கை ஏற்றுக் கொண்ட இந்திய தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இபிஎஸ் தரப்பு ஆவணங்களை பதிவிட்டுள்ளது. அதில், எடப்பாடி பழனிசாமி பெயரில் அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரித்துறை கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையும் அங்கீகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில் தேர்தல் ஆணையத்தில் இந்த முடிவு ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com