
பொங்கல் பண்டிகையையொட்டி, குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசி, சா்க்கரை ஆகிய பொருள்களுடன் ரூ. 1,000 ரொக்கத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக தமிழகத்தில் 2.19 கோடி மக்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசின் பரிசுத் தொகுப்பு வழங்குவது குறித்து கடந்த சில நாள்களாக ஆலோசிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 1,000 ரொக்கத் தொகை வழங்கப்படும் என்றும் அத்துடன் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வருகிற ஜனவரி 2 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கரோனா தீவிரம்: குஜராத்தில் பிரதமர் மோடி ஏன் பிரசாரம் செய்தார்? - ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கேள்வி
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2023-ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வருகிற 2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000/- வழங்கிட முடிவு செய்யப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் அரசுக்குச் சுமார் ரூ.2,356.67 கோடி செலவினம் ஏற்படும்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை 2.1.2023 அன்று சென்னையிலும், அன்றைய தினமே மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்களும் தொடங்கி வைப்பார்கள்.