பொங்கல் பரிசுத்தொகுப்புடன் கரும்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பும் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்
Published on
Updated on
2 min read

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பும் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

வரும் ஜன.15-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.1,000 பரிசுத் தொகையுடன் ஒரு கிலோ பச்சரிசி, சா்க்கரை வழங்கப்படும் என சமீபத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

இருப்பினும் தமிழக அரசின் சாா்பில் வழங்கப்படவுள்ள இந்த பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். கரும்பு வழங்காததற்கு எதிராக அதிமுக போராட்டம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக விவசாயி ஒருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் விசாரணையில் இருந்து வருகிறது. 

இதையடுத்து, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பெரிய கருப்பன், சக்கரபாணி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

கூட்டத்தில் முடிவில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பும் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் டிசம்பர் 30 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கரும்பு சேர்க்கப்பட்டுள்ளதால் ஜனவரி 3 முதல் 8 ஆம் தேதி வரை டோக்கன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதுபோல, ஜனவரி 2-க்குப் பதிலாக, ஜனவரி 9 ஆம் தேதி முதல்வர் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதை தொடங்கிவைக்கிறார். 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

முதல்வர் மு.க. ஸ்டாலின், ஏற்கெனவே அறிவித்து பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பினையும் சேர்த்து வழங்கிட விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றது குறித்து, இன்று (28-12-2022) தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட  1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன், முழுக் கரும்பு ஒன்றினையும் சேர்த்து, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

♦ இதனடிப்படையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வினை 2-1-2023-க்கு பதிலாக 9-1-2023 அன்று முதல்வர் தொடங்கி வைப்பார். 

♦ பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் கொடுக்கும் பணி 3-1-2023 முதல் 8-1-2023 வரை நடைபெறும். 

இந்தக் கூட்டத்தில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைச் செயலாளர் சி. சமயமூர்த்தி, இ.ஆ.ப., மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com