
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் ஆகிவற்றுடன் பல்வேறு அறிவியல் அமைப்புகள் இணைந்து ஜனவரி மாதம் மாநிலம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் நட்சத்திர விழாவை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன.
கி.பி. 1610 ஆண்டு, ஜனவரி 7ஆம் நாளில்தான் தலைசிறந்த வானியலாளர் கலிலியோ கலிலீ, சூரியக் குடும்பத்தின் வியாழன் கோளை, தனது தொலைநோக்கி மூலமாக ஆராய்ந்து, அதனைச் சுற்றி வரும் 4 நிலவுகளை முதன்முதலில் கண்டுபிடித்தார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பை கொண்டாடும் வகையில் மாநிலம் முழுவதும் நட்சத்திர விழா கொண்டாட அறிவியல் அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன.
இதையும் படிக்க | ‘பாஜகதான் எனக்கு குரு’: என்ன சொல்கிறார் ராகுல்காந்தி?
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை, தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் கூட்டுறவு, மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார், அறிவியல் பலகை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் மற்றும் எய்டு இந்தியா ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சி 2023ஆம் ஆண்டு ஜனவரி 7 முதல் 9 வரையிலான தேதிகளில் மாலை 6 மணி முதல் மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் வானவியலில் ஆர்வம் உள்ளவர்கள், மாவட்ட வானியல் மன்றங்கள், உள்ளூர் வானியல் மன்றங்கள், வானியல் ஆர்வலர்கள் என ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்.
இதையும் படிக்க | திகார் சிறை திரும்பினார் உமர் காலித்
பல்வேறு வகையான தொலைநோக்கிகள் மற்றும் பைனாக்குலர்கள் மூலமும், எளிய செயல்விளக்கக் கருவிகளைக் கொண்டு நிலா, கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றைக் கண்டு வானவியலை நன்கு அறிந்துகொள்ளும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் இரவு வானின் பல நட்சத்திரக் கூட்டங்களையும் விளக்கிக் கூறும் விதத்தில் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் பங்கேற்க எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இம்மாதிரி வானியல் திருவிழா நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் உதயன் (94444 53588) சென்னை, மேகலா (99867 88022) சேலம், சு. உமா (94876 22648) திருச்சி, சாய்லெஷ்மி ( 97895 34665) கோவை, தான்யா (73586 31623) மதுரை ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.