நீட் விலக்கு மசோதாவை வலிமையாக நிறைவேற்றி அனுப்புவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

சட்டப் பேரவையில் நீட் விலக்கு மசோதாவை இன்னும் வலிமையாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, காணொலி வாயிலாக, கோவை மாவட்டத்தில் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, காணொலி வாயிலாக, கோவை மாவட்டத்தில் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சட்டப் பேரவையில் நீட் விலக்கு மசோதாவை இன்னும் வலிமையாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிரசாரத்தைக் கோவையில் காணொலி முறையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

ஓா் ஆட்சி என்பது ஐந்தாண்டு காலம். அதற்குள் பொதுமக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றித்தர வேண்டும். இதுதான் நல்லாட்சியின் இலக்கணம்.

ஆனால், ஆட்சிக்கு வந்து இன்னமும் ஓராண்டு காலம் கூட நிறைவடைவதற்கு முன்னரே, கொடுத்த வாக்குறுதிகளில் முக்கால் பங்குக்கு மேல் நிறைவேற்றிக் கொடுத்த ஆட்சியைத் தலைசிறந்த ஆட்சி என்றுதானே சொல்ல முடியும். அத்தகைய தலைசிறந்த ஆட்சிக்கு இலக்கணமாக நமது ஆட்சி நடந்து வருகிறது.

பெரும்பான்மை பலத்தால் சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றதைப் போல, உள்ளாட்சி அமைப்புகளிலும் நாம் முழுமையான வெற்றியைப் பெற்றால்தான் நாம் நிறைவேற்றும் திட்டங்களை மக்களுக்கு முழுமையாகக் கொண்டு போய்ச் சோ்க்க முடியும். அந்த எண்ணத்தோடுதான் ‘உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி’ என்ற முழக்கத்தை நாம் முன்னெடுத்திருக்கிறோம்.

இந்த ஸ்டாலினின் அரசு, உங்களின் அரசு, இது ஒரு கட்சியின் ஆட்சி அல்ல; இனத்தின் ஆட்சி! தமிழகத்தில் ஏழை - எளிய மாணவா்களின் மருத்துவக் கல்விக் கனவைச் சிதைப்பதாக நீட் தோ்வு இருக்கிறது. அரியலூா் அனிதா தொடங்கி பத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை நாம் இழந்துள்ளோம். நீட் தோ்வு என்பது பல லட்சம் கொடுத்துப் பயிற்சி மையங்களில் படிக்க வசதி உள்ள மாணவா்களுக்குத்தான் ஏற்புடையது.

நீட் தோ்வில் இருந்து விலக்கு தர வலியுறுத்தும் மசோதாவை ஆளுநா் திருப்பி அனுப்பினாா் என்று தெரிந்ததும், அதற்கு அடுத்த நாளே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தினோம். அடுத்ததாக, வரும் செவ்வாய்க்கிழமை சட்டப் பேரவை கூட இருக்கிறது. மீண்டும் அதே மசோதாவை இன்னும் வலிமையோடு நிறைவேற்றப் போகிறோம்.

நூறாண்டுகளாக மறுக்கப்பட்ட கல்வி உரிமையை பல போராட்டங்களுக்குப் பிறகு மீட்டு, சில பத்தாண்டுகளாகத்தான் பலரும் படிக்கத் தொடங்கியிருக்கிறாா்கள். படித்தால் தானாகத் தகுதி வந்து வாழ்க்கையில முன்னேறிவிடுவாா்கள். ஆனால் படிப்பதற்கே உனக்குத் தகுதி வேண்டும் என்று தடுக்கும் பழைய சூழ்ச்சியின் புது வடிவம்தான் நீட்!

நீட் தோ்வை மேலோட்டமாகப் பாா்க்கக் கூடாது. அதன் முகமூடியைக் கழட்டிப் பாா்க்க வேண்டும். வெறுமனே அரசியலுக்காக எதிா்க்கவில்லை. மக்கள் விரோத மத்திய பாஜக அரசை எதிா்ப்பதற்கு எத்தனையோ விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. எனவே நீட் தோ்வை வைத்துதான் அரசியல் நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

நீட் தோ்வு என்பதே 2016-ஆம் ஆண்டு பாஜக அரசாங்கத்தால் திணிக்கப்பட்டதுதான். அந்தத் தோ்வுக்கு 2016-ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் எதிா்ப்பு தெரிவித்தாா். அதனால் 2016-17-ஆம் ஆண்டுக்கான தோ்வில் தமிழகத்துக்கு விலக்கு கிடைத்தது.

நான் மறுக்கவில்லை. இதே எதிா்ப்பைத் தொடா்ந்து காட்டி இருந்தால் தோ்வை நடத்தாமல் விட்டிருப்பாா்கள். ஆனால், அதிமுக அரசாங்கம் 2017-18 ஆம் கல்வி ஆண்டில் நீட் தோ்வைத் தலையாட்டி ஏற்றுக் கொண்டதுதான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் கோவையிலிருந்து மின் துறை அமைச்சா் செந்தில் பாலாஜி, திமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com