திமுக இரட்டை வேடம் போடுகிறது: எடப்பாடி பழனிசாமி

திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இரட்டை வேடம் போடுகிறது என்றார் முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி.
மேடையில் பேசும் எடப்பாடி கே. பழனிசாமி
மேடையில் பேசும் எடப்பாடி கே. பழனிசாமி

தஞ்சாவூர்: திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இரட்டை வேடம் போடுகிறது என்றார் முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி.

தஞ்சாவூர் ரயிலடியில் மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் அவர் பேசியது:

தேர்தலில் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி அதிமுக. ஆனால், நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக திமுக கூறியது. ஆனால், திமுக சொன்னபடி கொடுக்கவில்லை. தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சும், தேர்தல் முடிந்த பிறகு ஒரு பேச்சும் என திமுக இரட்டை வேடம் போடுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏராளமான திட்டங்கள் அதிமுக ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டன. ஆனால், திமுக ஆட்சியில் எதுவுமே செய்யப்படவில்லை. மக்களின் நிலை, பொருளாதார நிலை உயர அடித்தளமிட்ட கட்சி அதிமுக.

இந்தப் பொன் விளையும் பூமியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கொண்டு வருவதற்காக ஒப்பந்தம் போட்டவர் ஸ்டாலின். அதைத் தடுத்து நிறுத்தியவர் ஜெயலலிதாதான். அதிமுக ஆட்சியில்தான் இந்தப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு, விவசாயம் பாதுகாக்கப்பட்டது. விவசாயிகளை வாழ வைத்த அரசு ஜெயலலிதாவின் ஆட்சி.

தேர்தல் வாக்குறுதியில் 70 சதவீதம் நிறைவேற்றப்பட்டு விட்டதாகக் கூறி மக்களை ஸ்டாலின் ஏமாற்றுகிறார். ஆட்சிக்கு வந்த பிறகு மக்களை மறக்கும் கட்சி திமுக. கடந்த 9 மாதங்களில் நாட்டு மக்களுக்காக திமுக எதையும் செய்யவில்லை.

சமையல் எரிவாயு ரூ. 100 தருவதாகக் கூறினார். அதற்கு பதிலாக சமையல் எரிவாயு விலை ரூ. 100 உயர்ந்துவிட்டது.  நகைக்கடன் தள்ளுபடி 35 லட்சம் பேருக்குக் கிடைக்கவில்லை. பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசுக் குறைத்தாலும், திமுக அரசுக் குறைக்கவில்லை.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வந்த நெல் கொள்முதல் செய்யப்படாமல் திறந்தவெளியில் கிடக்கிறது. இதனால் விவசாயிகளின் நெல் மழையில் நனைந்து வீணாகிறது. இதேபோல, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லும் திறந்தவெளியில் கிடப்பதால், மழையில் நனைந்து மீண்டும் முளைக்கிறது.

பொங்கல் பரிசுத் தொகை அதிமுக ஆட்சியில் ரூ. 2,500 வழங்கப்பட்டபோது, ரூ. 5,000 வழங்க வேண்டும் எனக் கூறியவர் ஸ்டாலின். ஆனால், அவர் ஆட்சிக்கு வந்த பிறகு பொங்கல் பரிசுத் தொகையே கொடுக்கவில்லை. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் ரூ. 410 கோடிக்கு முறைகேடு நிகழ்ந்துள்ளது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை ஸ்டாலின் நிறைவேற்றவில்லை.
மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றுவது உள்ளாட்சி அமைப்பு. இதில், அதிமுக வெற்றி பெற வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், ஒரத்தநாடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன், மாநிலங்களவை உறுப்பினர் ஏ. நவநீதகிருஷ்ணன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சி. சேகர், மா. கோவிந்தராசு, எம். ரத்தினசாமி, இராம. இராமநாதன், எம்.ஜி.எம். சுப்பிரமணியன், இளமதி சுப்பிரமணியன், ராமச்சந்திரன், ராஜேந்திரன், ஜெயராமலிங்கம், அதிமுக தெற்கு மாவட்ட அவைத் தலைவர் எஸ்.வி. திருஞானசம்பந்தம், முன்னாள் மாவட்டச் செயலர் துரை. திருஞானம், மாணவரணி தெற்கு மாவட்டச் செயலர் ஆர். காந்தி, பகுதிச் செயலர்கள் வி. அறிவுடைநம்பி, வி. புண்ணியமூர்த்தி, எஸ். ரமேஷ், எஸ். சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com