விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என  பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :18 பிப்ரவரி 2022, 1:45 pm

DIN

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என  பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில், பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளைச் சேகரிக்கும் மையத்தினை அமைத்திடும் நடவடிக்கைகளைக் கைவிடக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (18-2-2022) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தின்கீழ், அணு உலைகளிலிருந்து வெளியேறும் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக பொது மக்களிடையே உள்ள கவலையை இந்தியப் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இந்தத் திட்டத்தில் 1000 மெகாவாட் திறன் கொண்ட ஆறு அணுமின் உலைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அந்த ஆறு அலகுகளில், அலகுகள் 1 மற்றும் 2 ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ளன என்றும், அலகுகள் 3 மற்றும் 4 கட்டுமானத்தில் உள்ளன என்றும், அலகுகள் 5 மற்றும் 6 இன்னும் நிறுவப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அக்கடிதத்தில், ஆறு அணுமின் உலைகளிலிருந்து உருவாகும் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை, அணுமின் நிலைய வளாகத்திற்குள்ளேயே, அணு உலைக்கு அப்பால் (Away from reactor) சேமித்து வைப்பதற்கான வசதிகளை அமைக்க இந்திய அணுமின் கழகம் திட்டமிட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், அலகுகள் 1 மற்றும் 2-க்கு முன்பு அனுமதி அளித்தபோதே, இரண்டு அலகுகளில் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை, தற்காலிகமாக அணுமின் நிலைய வளாகத்திற்குள் (உலையில்) சேகரித்து, சேமித்து, பின்னர் அதன் சொந்த நாடான ரஷ்யாவிற்கே திருப்பியனுப்பிட ஒப்பந்தம் போடப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், பின்னர் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை, அணுமின் நிலைய வளாகத்திற்குள்ளேயே, அணு உலைக்கு அப்பால் (Away from reactor) சேமித்து வைப்பதற்கான வசதிகளை நிரந்தரமாக ஏற்படுத்திட முடிவு செய்யப்பட்டது என்றும், மாநில அரசுடன் கலந்தாலோசிக்காமல் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை, அணுமின் நிலைய வளாகத்திற்குள், அணு உலைக்கு அப்பால் சேமித்து வைப்பதால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் ஆபத்துகள் தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் உட்பட தமிழக மக்களின் ஆழ்ந்த கவலையையும், அச்சத்தையும் தாம் பகிர்ந்து கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், உலகெங்கிலும் பல இடங்களிலுள்ள இதுபோன்ற வசதிகள் விபத்துகளை எதிர்கொண்டுள்ளன என்றும், சுற்றுச்சூழல் மற்றும் அத்தகைய ஆலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இது பேரழிவினை ஏற்படுத்திட வழிவகுத்திடும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அப்பகுதியில் உள்ள மக்கள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அச்சம் கொண்டுள்ளதாகவும், அதன்காரணமாக அணுமின் நிலைய வளாகத்திற்குள், பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளைச் சேமித்து வைத்திடும் வசதியை ஏற்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர் என்றும் அவர் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
தமிழக மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலன்களைக் கருத்தில்கொண்டு, பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை மீண்டும் ரஷியாவுக்கே கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும், இந்நடவடிக்கை அலகுகள் 1 மற்றும் 2-க்கு மட்டுமல்லாமல், அடுத்தடுத்த நான்கு அலகுகளுக்கும் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளதோடு, இது சாத்தியப்படாவிடில், மக்கள் வசிக்காத மற்றும் சூழலியல் அல்லாத பகுதியில், நிலத்தடி ஆழ்நிலை கிடங்கு (Deep Geological Repository) அமைத்து, பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகள் நிரந்தரமாக சேமிக்கப்படலாம் என்றும், தமிழ்நாட்டிலுள்ள எட்டு கோடி மக்களின் சார்பாக இந்த வேண்டுகோளை தான் விடுப்பதாகவும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.