காஞ்சிபுரம் மாநகராட்சியில் திமுக கூட்டணி 32 இடங்களில் வெற்றி

காஞ்சிபுரம் மாநகராட்சியில் திமுக கூட்டணி 32 இடங்களில் வெற்றி, பெண் ஒருவர் முதல் மேயராகிறார்.
காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பன்னீர் செல்வம் தலைமையில் மாநகராட்சிக்கான தபால் வாக்குகள் பிரித்து எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள அரசுப்பணியாளர்கள்
காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பன்னீர் செல்வம் தலைமையில் மாநகராட்சிக்கான தபால் வாக்குகள் பிரித்து எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள அரசுப்பணியாளர்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடந்த போது திமுக கூட்டணி 32 இடங்களில் வெற்றி பெற்று முதல் மேயராக பெண் ஒருவர் வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இதில் 36 வது வார்டு உறுப்பினரான வே.ஜானகிராமன் கடந்த வாரம் காலமானதைத் தொடர்ந்து அந்த வார்டுக்கான தேர்தல் மட்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் 50 வார்டு உறுப்பினர்களுக்கான வாக்குப்பதிவு இம்மாதம் 19 ஆம் தேதி நடந்தது. 50 பதவிகளுக்கு 314 பேர் தேர்தலில் போட்டியிட்னர். 2,18,173 வாக்காளர்களில் 1,40,177 பேர் வாக்களித்திருந்தனர்.

வாக்குப்பதிவு சதவிகிதம் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 64.25 சதவிகிதமாகும். 218 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.

வாக்கு எண்ணிக்கை காஞ்சிபுரம் அருகே பொன்னேரிக்கரையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 18 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். வாக்கு எண்ணும் மையம் முழுவதும் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டிருந்தது.

14 மேஜைகள் அமைக்கப்பட்டு 16 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடந்தது. ஒவ்வொரு 14 வார்டுகளாக வாக்கு எண்ணிக்கை மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பன்னீர் செல்வம் தலைமையில் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அலுவலருமான பா.நாராயணன் அதற்கான சான்றிதழை உடனுக்குடன் வழங்கினார். முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணும் பணி நடந்தது. 1,195 தபால் வாக்குகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் 494 வாக்குகளே பதிவாகியிருந்தன.

இதனைத் தொடர்ந்து முதலாவதாக முதல் 14 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதனையடுத்து அடுத்தடுத்த வார்டுகளின் எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று மாலை 4 மணிக்கு அனைத்து வார்டுகளுக்குமான வெற்றி, தோல்வி அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சியிலும் திமுகவினரே அதிகமான எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் திமுக கூட்டணி 32 இடங்களிலும், அதிமுக 9, பாமக 2, பாஜக 1, சுயேச்சைகள் 6 பேர் உட்பட மொத்தம் 50 இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அவர்களுக்கு அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்கள் மையத்தை விட்டு வெளியில் வரும் போது அவர்களது ஆதரவாளர்கள் வாக்கு எண்ணும் மையத்தின் முன்பாக பட்டாசு வெடித்துக் கொண்டாடியதால் சென்னை - பெங்களூரு சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் உள்ளாட்சித் தேர்தல் என்பதாலும் மேயர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால் முதல் முதலாக திமுகவைச் சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர் மேயராக தேர்வாக இருக்கிறார். வரும் மார்ச் 2 ஆம் தேதி புதிய உறுப்பினர்கள் பதவியேற்பும், மார்ச் 4 ஆம் தேதி மேயர் தேர்வும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com