வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அச்சுறுத்தலுக்கு எதிராக அனைவரும் ஒன்றுதிரள வேண்டும்: முதல்வர் அழைப்பு

நாடு எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தலுக்கு எதிராக அனைவரும் ஒன்றுதிரள வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

News image
Updated On :28 பிப்ரவரி 2022, 3:15 pm

DIN


நாடு எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தலுக்கு எதிராக அனைவரும் ஒன்றுதிரள வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 

'உங்களில் ஒருவன்' புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரிவினைவாத சக்திகளால் நாடு எதிர்கொண்டு வரும் அச்சுறுத்தலை வீழ்த்தி நாட்டின் அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாக்க மதச்சார்பின்மை மீது நம்பிக்கை கொண்டுள்ள அனைவரும் ஒன்றுதிரள வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் தன்வரலாற்று நூலான 'உங்களில் ஒருவன்' புத்தக வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 'உங்களில் ஒருவன்' புத்தகத்தை வெளியிட்டார்.

விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:  

நான் மேயரானபோது பதவி என்று ஒரு வார்த்தை சொன்னேன். பதவி என்ற சொல்லைத் திருத்தி அதைப் பொறுப்பு என்று கருணாநிதி மாற்றினார். கருணாநிதியின் அந்தத் திருத்தம்தான் என் வாழ்விலே மறக்க முடியாத பெரிய பாடம்.

எந்த உயர் பொறுப்புக்கு வந்தாலும் நான் உங்களில் ஒருவன்தான். அதன் சிலவற்றை சமுதாயத்துக்குச் சொல்லியாக வேண்டும் என்பதற்காக சிறுசிறு பகுதிகளாக நான் எழுதி வைத்தியுள்ள தொகுப்புதான் இந்தப் புத்தகம்.

1972-இல் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். நான் பிறந்ததற்கும் இதற்கும் இடைபட்ட காலத்தில் நிகழ்ந்த வரலாறுதான் இந்தப் புத்தகம்.

அரசியலுக்கு வராமல் போயிருந்தால் என்னவாயிருப்பீர்கள் என்று ஒருவர் கேட்டார். அரசியலில்தான் இருந்திருப்பேன் என்று பதிலளித்தேன். நான் கட்சி, கட்சி, கட்சி என்றிருந்தேன் என்பதை இந்தப் புத்தகத்தை வாசித்தால் நீங்கள் உணரலாம்.

மிகச் சிறிய வயதிலேயே நாம் பிற்காலத்தில் என்னவாகப்போகிறோம் என்பதைத் தீரமானித்துவிட்டால், அதிலிருந்து இம்மி அளவு விலகாமல் பயணித்தால் அதை அடைந்தே தீரலாம் என்பதை நான் பதிவு செய்கிறேன். அந்த அடையாளம்தான் இந்தத் தொகுப்புப் புத்தகம்.

நான் எனது இயல்பிலேயேதான் இருந்தேன். இயல்புதான் என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

நான் பக்குவப்பட்ட காலத்தில் பிறந்தவன்தான் ஸ்டாலின், அது அவனது இயல்பிலேயே தெரியும் என்றார் கருணாநிதி. அந்தப் பக்குவம் சிறு வயதிலேயே எனக்கு இருந்தது என்பது இந்தப் புத்தகத்தைப் பார்த்தால் தெரியும். அதற்கு சிறு வயதில் நான் பார்த்த அரசியல் நெருக்கடிகள், கைதுகள், போராட்டக் காட்சிகள் காரணமாக இருக்கலாம். பொதுவான இளைஞர் வாழ்க்கையில் நடக்காதது கேட்காதது எல்லாம் என் வாழ்வில் நடந்து இருக்கிறது. அதுவும் காரணமாக இருக்கலாம். 

என்னுடைய 12 வயதில், மொழிப்போராட்டத்தில் பங்கேற்றதற்காக தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கருணாநிதி, முரசொலி மாறன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டார்கள். 

கல்லூரி காலத்தில் மிசாவில் கைதானேன். கோபாலபுரம் வீட்டின் அறையாக சிறையிருந்தது. அதுதான் என்னை செதுக்கியது. அது தமிழ்நாடு அரசின் நிரந்தர சபை. திராவிட இயக்கத்தின் திருச்சபை. திரையுலக கலைஞர்களுக்கு அது கலைச் சபை. இலக்கியவாதிகளுக்கு சிந்தனைச் சபை. மொத்தத்தில் அது உயிர்ச் சபை. 

அதுதான் என்னை உருவாக்கியது. அது என்னை வளர்த்து, ஆளாக்கி, பக்குவப்படுத்தியது. அந்த வகையில் பார்த்தால் இந்தப் புத்தகம் அந்த வீட்டின் வரலாறு. 

பள்ளிப் பருவத்தில் கழகப் பாடம் படித்த வரலாறு. பாடப் புத்தகங்களோடு முரசொலி படித்த வரலாறு. கல்லூரி காலங்களில் அரிதாரம் பூசி முரசே முழங்கு நாடகம் போட்ட வரலாறு. படித்து முடித்து பணிக்குப் போக விரும்பாமல், மொழியைக் காப்பதற்காக உயிரைக் கொடுக்கத் தயாராக இருந்த வரலாறு. திரையுலகில் கால்பதித்த வரலாறு. 23 வயதில் துர்காவைக் கரம் பிடித்த வரலாறு. திருமணமாகி 5 மாத காலத்தில் சிறைபிடிக்கப்பட்ட வரலாறு. எல்லா திருப்பங்களையும் 23 வயதுக்குள் பார்த்தவன் நான். அதைத்தான் புத்தகமாக எழுதியிருக்கிறேன்.

கருணாநிதி, அண்ணா இருந்த நாற்காலியில் நான் அமருவேன் என்று நினைத்ததே கிடையாது.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவனாக இருந்தபோது அண்ணா பிறந்தநாளை நடத்திய பல நிகழ்ச்சிகளுக்கு துரைமுருகனைப் பேச்சாளராக பேச வைத்து அழகு பார்த்தவன் நான். இன்று அவர் திமுக பொதுச்செயலாளர். நான் கட்சித் தலைவர்.

1953இல் நான் பிறந்தபோது குலக் கல்வியை எதிர்த்து போராடினோம். இன்று நீட் தேர்வை எதிர்த்துப் போராடுகிறோம். பள்ளி மாணவனாக ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினோம். இன்று ஹிந்தி ஆதிக்கத்துக்கு எதிராக போராடுகிறோம். 1971இல் அண்ணா விழாவை நான் நடத்தியபோது மூன்று மாநில அமைச்சர்களை அழைத்து மாநில சுயாட்சிக்காகக் குரல் கொடுத்தோம். இன்றும் அதற்கு முழங்கிக்கொண்டு இருக்கிறோம்.

புத்தகத்தில் இருப்பதை கூறிக்கொள்ள வேண்டாம் என்று இத்துடன் நிறுத்துகிறேன்.

இந்த் புத்தகத்தில் நான் மட்டுமல்ல நூற்றுக்கணக்கான நபர்களின் முகங்கள் அதில் உள்ளன. என்னுடன் பயணித்தவர்கள், துணை வந்தவர்கள் என கூட்டம் பெரியது.

நான் தனி மனிதன் அல்ல, ஒரு கூட்டம் என்பதைக் கூறுகிறேன். இது கொள்கைக் கூட்டம் என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.

எனது குறிக்கோள் என்றும் பதவியாக, பொறுப்பாக இல்லாமல் கொள்கையாக உள்ளது. சுயமரியாதை கொள்கையிலே பெரியார், இன எழுச்சியிலேயே அண்ணா, இயக்கத்தை வழிநடத்துவதில் கருணாநிதி, மொழி உரிமையில் பேராசிரியர் என நால்வர் நிழற்குடையில நிற்கிறேன். இவர்கள்தான் என்னை செதுக்கியவர்கள். அவர்கள் தனிமனிதர்கள் அல்ல, தத்துவத்தின் அடையாளங்கள்.

அத்தகைய தத்துவங்களின் அடையாளமாக நான் இருக்க விரும்புகிறேன். எனது தத்துவத்திற்கு திராவிட மாடல் என்பதுதான் பெயர். மாடல் என்பது ஆங்கிலச் சொல். தமிழில் திராவிடவியல் ஆட்சி முறை. அதுதான் என் கோட்பாடு. அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் கோட்பாட்டின் நெறிமுறை. எல்லாருக்கும் எல்லாம் என்பது திராவிடவியல் கோட்பாடாகும். 

அனைத்து தேசிய இனங்களும் சரிநிகர் உரிமை தரப்படும் என்பதுதான் திராவிடவியல் கோட்பாடு. இந்தியா முழுமைக்கும் இதை எடுத்துச் சொல்ல வேண்டும். இந்த உணர்வில்தான் ராகுல் காந்தி, பினராயி விஜயன், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில்  'இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்' என்று ராகுல் காந்தி கூறினார். திராவிடவியல் கோட்பாட்டை முழுமையாக உள்வாங்கியிருக்கிறார் என்பதை இது காட்டுகிறது. கூட்டாட்சித் தத்துவம் குறித்து ராகுல் காந்தி அதிகம் பேசியிருக்கிறார். அதற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் உள்ள வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். அனைத்து மாநில கட்சிகளும் அதற்குக் குரல் கொடுக்க வேண்டும். அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து அதற்குப் பாடு பட வேண்டும். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியிலே கூட்டாட்சி என்பது இந்தியாவின் முழக்கமாக மாறியுள்ளது.

தலைவர்களுக்கானது மட்டுமல்லாமல் மதச்சார்பின்மை மீது நம்பிக்கை கொண்டுள்ள அனைவருக்குமான வேண்டுகோள் இது. பிரிவினைவாத சக்திகளால் இந்திய ஒன்றியம் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. இதை வீழ்த்தி இந்திய அடிப்படைக்கொள்கைகளைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.