அம்மா கிளினிக்: மானாமதுரை ஒன்றியக் குழுக் கூட்டத்தில் அதிமுக - திமுக வாக்குவாதம்

அம்மா மினி கிளினிக் மூடப்பட்ட பிரச்சினை  தொடர்பாக அதிமுக, திமுக கவுன்சிலர்களுக்குள் கடும் வாக்குவாதம் நடைபெற்றதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  
மானாமதுரை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் அம்மா மினி கிளினிக் மூடப்பட்ட விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் செய்யும் அதிமுக - திமுக உறுப்பினர்கள்.
மானாமதுரை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் அம்மா மினி கிளினிக் மூடப்பட்ட விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் செய்யும் அதிமுக - திமுக உறுப்பினர்கள்.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் அதிமுக அரசால் தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக் மூடப்பட்ட பிரச்சினை  தொடர்பாக அதிமுக, திமுக கவுன்சிலர்களுக்குள் கடும் வாக்குவாதம் நடைபெற்றதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  

மானாமதுரை ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் புதன்கிழமை ஊராட்சி ஒன்றியத் தலைவர் லதா அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் முத்துசாமி முன்னிலை வகித்தார். ஒன்றிய ஆணையாளர், வட்டார வளர்ச்சி அலுவலர்,மேலாளர் தவமணி உள்பட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

கூட்டம் தொடங்கியதும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர் பஞ்சவர்ணம் பேசுகையில், மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் பள்ளிக்கூடம் கட்டடங்கள் இடிப்பதற்கு விடப்பட்ட டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவேன். ஒப்பந்தப்புள்ளி குறிப்பிட்ட நபர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது என்றார். 

அப்போது பதிலளித்துப் பேசிய திமுக உறுப்பினர் அண்ணாதுரை, ஒன்றிய குழுக் கூட்டத்தில் மக்கள் பிரச்னைகளை பற்றி மட்டுமே பேச வேண்டும். ஒப்பந்தகாரர் போல் பேசக்கூடாது என்றார். 

இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பேசிய அதிமுக உறுப்பினர் ருக்குமணி எனது ஒன்றிய குழுவுக்கு உள்பட்ட ராஜகம்பீரம் ஊராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்குவதில் பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை காட்டப்படுவதாக கடந்த கூட்டத்தில் புகார் தெரிவித்தேன். அதுகுறித்து ஆதாரத்தை கொண்டுவந்து கொடுங்கள் என்று கூறினீர்கள் இப்போது ஆதாரத்துடன் வந்திருக்கிறேன் என தான் கொண்டு வந்திருந்த ஆதாரத்தை தூக்கி காண்பித்து  பேசினார்.

அப்போது பேசிய திமுக உறுப்பினர் அண்ணாதுரை, பேப்பர் ஆதாரங்களை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஊராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட விவகாரம் என பதிலளித்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகம்பீரம் ஊராட்சியில் விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு விரைவில் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  

அப்போது ருக்குமணி எழுந்து இனிமேல் குடிநீர் இணைப்பு தேவையில்லை என்றார். இது தொடர்பாக அதிமுக உறுப்பினர் ருக்குமணிக்கும் திமுக உறுப்பினர் அண்ணாதுரைக்கும் வாக்குவாதம் நடந்தது. மேலும் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட  அம்மா மினி கிளினிக்கை மூடி விட்டீர்கள் என அதிமுக உறுப்பினர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. 

இதற்கு பதில் அளித்து பேசிய திமுக உறுப்பினர் அண்ணாதுரை, அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டம் முறையாக செயல்படாததால்தான் திமுக அரசு அவற்றை மூடிவிட்டது என்றார்.  

இந்த பதிலுக்கு  அதிமுக உறுப்பினர்கள் பஞ்சவர்ணம், ருக்குமணி இருவரும் ஆட்சேபம் தெரிவித்தனர். 

இப்பிரச்னை தொடர்பாக கூட்டத்தில் இருந்த திமுக உறுப்பினர்களுக்கும் மேற்கண்ட அதிமுக உறுப்பினர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அதிமுக உறுப்பினர்கள் இருவரும் கூட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு தலைவர், ஒன்றிய ஆணையாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் மட்டுமே பதில் கூற வேண்டும் என்றனர். 

ஒன்றிய குழு கூட்டத்தில் ஒன்றிய குழு பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் கோரிக்கை குறித்து பேசப்படாமல் அதிமுக, திமுக உறுப்பினர்களுக்குள் அரசியல் பேசப்பட்டு வாக்குவாதம் நீடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனால்  கூட்டம் முடிவடைவதாகவும் இனிவரும் கூட்டங்களில் அரசியல் பேசக்கூடாது எனவும் ஒன்றிய ஆணையாளர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com