வேலூர் சிஎம்சியில் மருத்துவப் பணியாளர்கள் 200 பேருக்கு கரோனா: இணைய முன்பதிவு நிறுத்தி வைப்பு

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மருத்துவர்கள், பணியாளர்கள் சுமார் 200 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் சிஎம்சியில் மருத்துவப் பணியாளர்கள் 200 பேருக்கு கரோனா: இணைய முன்பதிவு நிறுத்தி வைப்பு

வேலூர்: வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மருத்துவர்கள், பணியாளர்கள் சுமார் 200 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இணையதளம் மூலம் முன்பதிவு செய்வது நிறுத்தப்பட்டுள்ளதால் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை சரிந்துள்ளது.

புகழ்பெற்ற வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி அயல்நாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வேலூர் மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரமாக கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து, ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 315 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் சுமார் 200 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு சிஎம்சி மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஏற்கனவே வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு சுற்றுலா வருவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தவிர, வெளிமாநிலங்களில் இருந்து சிகிச்சைக்காக வருபவர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளது.

இதையடுத்து, வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல், புறநோயாளிகள் பிரிவில் தவிர்க்க இயலாத பாதிப்புகளு டன் வரும் நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கையும் சரிந்துள்ளது. 

மேலும், அறுவை சிகிச்சைகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் உள்நோயாளிகள் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக மருத்துவனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியது: சிஎம்சி மருத்துவமனையில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் என சுமார் 10,500 பேர் பணியாற்றுகின்றனர். 

இவர்களில் சுமார் 200 பேர் கரோனா வால் பாதிக்கப்பட்டிருப்பதாக கணக்கெடுப்பு எதுவும் இல்லை. எனினும், கரோனா பாதிப்பு அதி கரிப்பைத் தொடர்ந்து இணையதள முன்பதிவு, புறநோயாளிகள் பதிவு, அறுவை சிகிச்சைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.

மாநகர நல அலுவலர் மணிவண்ணன் கூறியது: வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரகாலத்தில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் சுமார் 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் அங்கேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com