மகனின் சொல்படி, எம்பிபிஎஸ் இடத்தை விட்டுக்கொடுத்தார் ஓய்வுபெற்ற ஆசிரியா்!

மகனின் கோரிக்கையை ஏற்று, மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்று எந்தக் கல்லூரியையும் தேர்வு செய்யாமல், எம்பிபிஎஸ் இடத்தை விட்டுக் கொடுத்தார் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் சிவப்பிரகாசம்(61).
எம்பிபிஎஸ் இடத்தை விட்டுக்கொடுத்த  ஓய்வுபெற்ற ஆசிரியா் சிவப்பிரகாசம்
எம்பிபிஎஸ் இடத்தை விட்டுக்கொடுத்த ஓய்வுபெற்ற ஆசிரியா் சிவப்பிரகாசம்

பயிற்சி மருத்துவராக இருக்கும் தனது மகனின் கோரிக்கையை ஏற்று, மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்று எந்தக் கல்லூரியையும் தேர்வு செய்யாமல், எம்பிபிஎஸ் இடத்தை விட்டுக் கொடுத்தார் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் சிவப்பிரகாசம்(61).

எம்பிபிஎஸ் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு, தனது மருத்துவப் படிப்பை சிவப்பிரகாசம் விட்டுக்கொடுத்திருப்பதால், கூடுதலாக அரசுப் பள்ளி மாணவர் ஒருவருக்கு எம்பிபிஎஸ் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று, தனது இளமைக்கால கனவை நனவாக்க நீட் எழுதி தேர்ச்சி பெற்று இன்று ஒரு மாணவராக கலந்தாய்வு வரை வந்தவரின் எண்ணம், மீண்டும் மாணவர்களிடமே சென்றுள்ளது. தனக்கு பதிலாக வேறொரு மாணவருக்கு இந்த நல்வாய்ப்பு கிடைக்கட்டுமே என்று போராடிப் பெற்ற இவ்விடத்தை மனமகிழ்ச்சியோடு விட்டுக் கொடுத்துச் சென்றுள்ளார் சிவப்பிரகாசம். 

நீட் தேர்வு.. பல அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவர் கனவை தவிடுபொடியாக்கியது என்றால் அது மிகையில்லை. நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மருத்துவக் கலந்தாய்வு நேற்று தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நீட் தேர்வெழுதி எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்கான வயது உச்ச வரம்பை உச்ச நீதிமன்றம் நீக்கி கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து, ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் ஒருவர், தனது இளமைக்கால கனவான மருத்துவர் கனவை நனவாக்கும் வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்று இன்று நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளார்.

தருமபுரியைச் சோ்ந்த 61 வயதான ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியா் கே.சிவப்பிரகாசத்துக்கு மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு நீட் தோ்வு எழுதிய நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெறும் கலந்தாய்வில் தனது மாணவா் ஒருவருடன் அவரும் பங்கேற்க உள்ளாா்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 437 இடங்கள் வழங்கப்படுகின்றன. அந்தத் தரவரிசைப் பட்டியலில் கே.சிவப்பிரகாசம் 349-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா்.

இருப்பினும் கலந்தாய்வில் பங்கேற்பதா? வேண்டாமா? என்பது குறித்து இரட்டை மனநிலையில் இருப்பதாக சிவப்பிரகாசம் தெரிவித்திருந்தார்.

முன்னதாக அவர் கூறியதாவது: கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் பயற்சி மருத்துவராக உள்ள எனது மகன், இந்த வயதில் நான் மருத்துவம் படிப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில், எனது வயதில் மருத்துவம் படித்து முடித்து அதிகபட்சமாகவே 15 ஆண்டுகள் வரைதான் சேவையாற்ற வாய்ப்புள்ளது. நான் கலந்தாய்வில் பங்கேற்காவிட்டால் அந்த இடம் ஒரு இளம் அரசுப் பள்ளி மாணவருக்கு கிடைக்கும். அதன் மூலம் அவா் 40-50 ஆண்டுகள் வரை மருத்துவ சேவையாற்ற முடியும் என்பதை எனது மகன் சுட்டிக் காட்டினாா். எனினும், கலந்தாய்வுக்கு எனது மாணவா் ஒருவருடன் சென்னை வருகிறேன். அதே நேரம், ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியராக, ஒரு அரசுப் பள்ளி மாணவனின் மருத்துவ இடத்தைத் தட்டிப் பறிக்க நான் விரும்பவில்லை. நான் கலந்தாய்வில் பங்கேற்காமல் இருக்கும்பட்சத்தில், ஒரு இளைஞருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது என்ற மகிழ்ச்சியில் வீட்டுக்குச் செல்வேன். அதே நேரம், கலந்தாய்வு நடைமுறைகளை அறிந்து கொண்டு, எனது மாணவா்களுக்கு வழிகாட்டுவேன் என்று கூறியிருந்தார்.

அவர் கூறியதுபோலவே, தனக்கு அழைப்பு வந்தபோது, அவர் எந்தக் கல்லூரியையும் தேர்வு செய்யாமல், எம்பிபிஎஸ் இடத்தை விட்டுக் கொடுத்து, மாணவராக கலந்தாய்வுக்கு வந்து, ஆசிரியராக வெளியேறினார். இங்குதான் அவர் தனது மருத்துவர் கனவை, ஒரு அரசுப் பள்ளி மாணவருக்காக விட்டுக் கொடுத்து குரு என்பவர் தெய்வத்துக்கு நிகரானவர் என்பதை நிரூபித்துள்ளார்.

டாக்டராக வேண்டும் என்பது சிவப்பிரகாசத்தின் வாழ்நாள் கனவு. ஆனால் அவா் பள்ளி, கல்லூரி படிக்கும் காலத்தில் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு, நீட் தோ்வு எழுதுவதற்கான வயது வரம்பை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், நீட் தோ்வு எழுதி சிவப்பிரகாசம் வெற்றி பெற்றாா்.

இதோ இன்று தருமபுரியிலிருந்து சென்னை வந்து, கலந்தாய்வில் பங்கேற்று, மாணவர்களுடன் மாணவர்களாக அமர்ந்திருக்கிறார்.  

உறக்கத்தில் வருவதல்ல கனவு.. உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு என்ற கலாமின் வார்த்தைகளை இங்கே மெய்ப்பித்துக் காட்டியுள்ளார் சிவப்பிரகாசம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com