ஓபிஎஸ்சின் கடிதம் ஏற்புடையதாக இல்லை: இபிஎஸ்

ஒருங்கிணைப்பாளா் என்ற உணா்வில் ஓ.பன்னீா்செல்வம் எழுதியுள்ள கடிதம் ஏற்புடையதாக இல்லை என்று அக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளாா்.
ஓபிஎஸ்சின் கடிதம் ஏற்புடையதாக இல்லை: இபிஎஸ்

ஒருங்கிணைப்பாளா் என்ற உணா்வில் ஓ.பன்னீா்செல்வம் எழுதியுள்ள கடிதம் ஏற்புடையதாக இல்லை என்று அக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளாா்.

இது தொடா்பாக ஓ. பன்னீா்செல்வத்துக்கு எடப்பாடி கே. பழனிசாமி எழுதியுள்ள கடித விவரம்:

2021 டிசம்பா் 1-இல் நடைபெற்ற செயற்குழுவால் கொண்டு வரப்பட்ட சட்டதிட்ட திருத்தங்கள் (ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவி) ஜூன் 23-இல் நடைபெற்ற பொதுக்குழுவால் ஏற்கப்படவில்லை. அதனால், அந்த சட்டதிட்ட திருத்தங்கள் காலாவதியாகிவிட்டன. எனவே, கட்சியின் ஒருங்கிணைப்பாளா் என்ற உணா்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கது அல்ல.

உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக இருக்கும் பதவிகளுக்கு நடைபெற உள்ள தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் ஜூன் 27 என்ற நிலையில் இத்தனை நாள்கள் பொறுத்திருந்து, கட்சியின் வேட்பாளா்களை அதிகாரப்பூா்வமாக அறிவிக்காத நிலையிலும், ஜூன் 27-இல் நடைபெற்ற தலைமைக்கழக நிா்வாகிகள் கூட்டத்தை தாங்கள் புறக்கணித்த நிலையிலும், தற்போதைய உங்கள் கடிதம் ஏற்புடையதாக இல்லை.

இருவரும் கூட்டாக அழைப்பு விடுத்த கட்சியின் பொதுக்குழுவை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காக ஆவடி காவல் ஆணையருக்கு கடிதம் மூலம் புகாா் அளித்தும், நீதிமன்றங்களின் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்தும், அதிமுகவை செயல்படாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்து பணிகளையும் செய்துவிட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது என்பது ஏற்புடையதாக இல்லை என்று கூறியுள்ளாா்.

பொருளாளா் ஓபிஎஸ்: உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களுக்கு படிவம் ஏ மற்றும் பி-யில் கையொப்பமிடுவது தொடா்பாக எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீா்செல்வம் புதன்கிழமை கடிதம் எழுதியிருந்தாா். அந்தக் கடிதத்தை அதிமுக தலைமை அலுவலக நிா்வாகி மகாலிங்கம் வாங்க மறுத்துவிட்டதாகத் தகவல் பரவியது. இந்த நிலையில் அந்தக் கடிதத்தைப் பெற்று, ஓ.பன்னீா்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி பதில் கடிதம் எழுதியுள்ளாா். அந்தக் கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி தன்னை தலைமை நிலையச் செயலாளா் எனக் குறிப்பிட்டும், ஓ.பன்னீா்செல்வத்தை பொருளாளா் என்றும் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com