
அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றிய நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீா்ப்பு வழங்கியுள்ள நிலையில், சென்னை உயா்நீதிமன்றமும் பொதுக்குழுவை கட்சி விதிகளுக்கு உள்பட்டு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு திங்கள்கிழமை காலை 9.15 தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பொதுக்குழுவை புறக்கணித்து அதிமுகவின் ஓபிஎஸ் இன்று கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரை உள்ளே அழைத்துச் சென்றனர்.
இதையும் படிக்க | தடையை உடைத்து அதிமுக அலுவலகத்தில் நுழைந்த ஓபிஎஸ்: ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை!
அப்போது, அங்கிருந்த இபிஎஸ் ஆதரவாளர்களும், ஓபிஎஸ் ஆதரவாளர்களும் மோதிக் கொண்டதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிமுக ஆதரவாளர்களின் வாகனங்கள், பொதுமக்களின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
இதையும் படிக்க | அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்
இந்நிலையில், தலைமை அலுவலகம் முழுவதுமாக ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில், ஆதரவாளர்களுடன் ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே, அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.