நீலகிரியில் கனமழை: நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்கள் குழு

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், நிவாரணப் பணிகளை  துரிதப்படுத்த அமைச்சர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நீலகிரியில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்கள் குழு
நீலகிரியில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்கள் குழு

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், நிவாரணப் பணிகளை  துரிதப்படுத்த அமைச்சர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முதல்வர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தென் மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழ்நாட்டில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 1.6.2022 முதல் 14.7.2022 முடிய தமிழ்நாட்டில் 115.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழை அளவை விட 48 விழுக்காடு கூடுதல் ஆகும். குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில், 1.6.2022 முதல் 14.7.2022 வரை 664.9 மி.மீ. மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இது இம்மாவட்டதிற்கான இயல்பான மழை அளவை விட 125 விழுக்காடு கூடுதல் ஆகும். 

மேலும், கடந்த ஒரு வார காலமாக நீலகிரி மாவட்டத்தில் கன மழை முதல் அதி கன மழை பெய்து வருகிறது. கடந்த 10.7.2022 முதல் 14.7.2022 முடிய நீலகிரி மாவட்டத்திற்கான இயல்பான மழை அளவு 38.9 மி.மீ. என்ற நிலையில், 263.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில், குடிசைகள்/வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன, ஒரு சில பகுதிகளில் சிறிய அளவில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீலகிரி மாவட்டத்தில், 22 குடும்பங்களைச் சார்ந்த 102 நபர்கள், 5 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், மருத்துவம் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தொடர் கன மழை ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரித்தப்படுத்தவும், வேளாண் / தோட்டக்கலைப் பயிர்களுக்கும், இதர உட்கட்டமைப்புகளுக்கும் ஏற்பட்டுள்ள சேதங்களை ஆய்வு செய்து அவற்றை உடனடியாக சீரமைக்கவும், வனத் துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் அவர்களுடன் இணைந்து பணியாற்ற வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனையும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜியையும் கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் எஸ்.கே. பிரபாகரையும் நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்பி வைத்துள்ளேன்.

மேலும், நீலகிரி மாவட்டத்தில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 160 வீரர்கள் அடங்கிய இரண்டு குழுக்கள் நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதோடு, அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.

மாவட்ட நிருவாகம் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும், பல்துறை மண்டல குழுக்களும், மீட்புக் குழுக்களும் தயார் நிலையில் உள்ளதோடு, பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களில் ஜே.சி.பி. இயந்திரங்கள், மரம் அறுப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களுடன் தொடர்புடைய துறை அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில், அமைச்சர்கள் தலைமையிலான அரசு நிருவாகம் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தும். பொதுமக்கள், அரசு மற்றும் மாவட்ட நிருவாகம் மூலம் வழங்கப்படும் முன்னெச்சரிக்கை செய்திகளை கவனித்து பாதுகாப்புடன் செயல்படுமாறும், மாவட்ட நிருவாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com