கலவர பூமியாக மாறிய கனியாமூர்... வன்முறையை நிறுத்திக் கொள்ள வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

போராட்டக்காரர்கள் வன்முறையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக காவல்துறைத் தலைவர் சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். 
டிஜிபி சைலேந்திர பாபு (கோப்புப் படம்)
டிஜிபி சைலேந்திர பாபு (கோப்புப் படம்)

கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், போராட்டக்காரர்கள் வன்முறையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக காவல்துறைத் தலைவர் சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் மாணவியின் உறவினர்கள் கடந்த 5 நாள்களாக அமைதியான முறையில் போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை போராட்டத்திற்கு அதிக அளவிலான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் பள்ளி மீது கற்களை வீசி சூறையாடினர். 

போராட்டக்காரர்களை தடுக்க முயன்றபோது, காவலர்கள் மீதும் போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் டிஐஜி உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர். மேலும், பள்ளி வாகனங்களை அடித்து நொறுக்கி தீயிட்டு எடித்தனர். சாலையோரம் இருந்த காவல் துறை வாகனத்திற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

கனியாமூரில் கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து உளவுத் துறை அதிகாரிகளுடன் தமிழக காவல்துறைத் தலைவர் சைலேந்திர பாபு ஆலோசனை மேற்கொண்டார். 

வன்முறைக்கு முக்கிய காரணம் யார்?, போராட்டத்தில் அமைப்புகளின் தலையீடு உள்ளதா? என்பது உள்ளிட்ட கோணங்களில் ஆலோசனை நடைபெற்று வந்தது. 

ஆலோசனைக்கு பின்னர் சைலேந்திர பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், மாணவி உயிரிழப்பு குறித்து கள்ளக்குறிச்சி எஸ்.பி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

போராட்டம் என்ற பெயரில் காவலர்கள் மீதும், வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் உடனடியாக கலவரத்தை, வன்முறையை நிறுத்திக் கொள்ள வேண்டும். போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் நுழைவதும், காவல்துறையை தாக்குவது சரியான போக்கு அல்ல. போராட்டத்தில் ஈடுபடுவோர் இனியும் வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சைலேந்திர பாபு  தெரிவித்தார். 

மேலும், வன்முறையில் ஈடுபட்டவர்கள் விடியோ மூலம் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டக்காரர்கள் தாக்கியதில், டிஐஜி உள்பட 20 காவலர்கள் படுகாயம் அடைந்தனர். 

ஆசிரியர்கள் மீதான புகாரின்மீது உண்மை இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர ஆயுதப்படையை சேர்ந்த 500 பேர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். 

போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டு பொருள்கள், உடைமைகள் மீது தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது.

கனியாமூரில் பகுதியில், செல்போன் மூலம் வதந்திகளை பரவுவதை தடுக்கும் வகையிலும், போராட்டக்காரர்கள் ஒன்றிணைவதைக் தடுக்கும் வகையில் நெட்வொர்க்குககள் தடை செய்யப்பட்டு ஜாமர்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

காவலர்கள் ஒருபுறம் தாக்கப்பட்டாலும், தொடர்ந்து அதிவிரைவுப்படையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com