கள்ளக்குறிச்சி பள்ளி தொடர் மரணங்கள்: வைரலாகும் 17 ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய கம்யூ. நோட்டீஸ்!

கள்ளக்குறிச்சியில் சர்ச்சையில் சிக்கியுள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் தொடர் மரணங்கள் நடப்பதாகக் கூறி, கடந்த 2005ல் போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நோட்டீஸ் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 
கள்ளக்குறிச்சி பள்ளி தொடர் மரணங்கள்: வைரலாகும் 17 ஆண்டுகளுக்கு முந்தைய  இந்திய கம்யூ. நோட்டீஸ்!

கள்ளக்குறிச்சி அருகே பிளஸ் 2 மாணவி உயிரிழந்த விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கியுள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் தொடர் மரணங்கள் நடப்பதாகக் கண்டனம் தெரிவித்து, பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 2005-லேயே ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

இந்த ஆர்ப்பாட்டத்துக்காக அப்போது அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தின் நகல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகிறது. 

உயிரிழந்த பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி படித்த சக்தி மெட்ரிக் பள்ளியில் இதுபோன்று தொடர் மர்ம மரணங்கள் நடைபெறுவதாகக் கூறி, 17 ஆண்டுகளுக்கு முன்னரே, கடந்த 2005 ஆம் ஆண்டு, டிசம்பர் 29 ஆம் தேதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னசேலம் ஒன்றியக் குழு சார்பில், சின்னசேலம் பேருந்து நிலையம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.

இதுதொடர்பான நோட்டீஸ் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்படுவதுடன், பள்ளி நிர்வாகம் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

இந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் (தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள) சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் கடந்த சில வருடங்களாக மர்ம கொலைகளும் ஒழுக்கக்கேடான செயல்களும் அரங்கேறி வருவதால் ஏழை-  எளிய மக்களின் பிள்ளைகளின் எதிர்காலக் கனவை, குழிதோண்டி புதைக்கும் நிர்வாகத்தின் மிகுந்த அலட்சியமும் அநியாயங்களும் தலைவிரித்தாடுவதை அளவிட முடியாது. நெஞ்சை பிளக்கும் வகையில் பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை பாய்ச்சி வருவதோடு மாணவர்களை நாள்தோறும் சொல்லொன்னா துயரங்களுக்கு ஆளாக்கி மனிதாபிமானமற்ற முறையில் பாடசாலையை கொலைக்களமாக்கி வருகின்றனர். 

வியாபார நோக்கில் செயல்படும் இப்பள்ளி மாணவ - மாணவிகள் கல்விக் கட்டணத்தை காலதாமதமாக கட்டினால் அம்மாணவர்களை கடுமையாக வெயிலிலும், மழையிலும் முட்டிபோட வைத்து துன்புறுத்துவது, அறைக்குள் பூட்டி வைத்து கல்வியாளர்களை கைதிகளாகத் தண்டிப்பது, விடுதியில் தங்கிப்படிக்கக் கட்டாயப்படுத்துவது, பாதுகாப்பற்ற முறையில் மண் தரையில் உணவு கொடுத்து உட்கார வைப்பது, அரசின் விதிமுறைகளை மீறி நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தைவிட பல மடங்கு சேர்த்து வசூலிப்பது, மேலும் பல வடிவங்களில் கல்விக்கு சம்மந்தமில்லாத பல்வேறு காரணங்களுக்கு கட்டணம் மிரட்டி வசூலிப்பதோடு நிர்வாகம் சார்ந்த பணிகளை மேற்கொள்ள மாணவர்களை சட்டத்திற்கு எதிராக நிர்பந்திப்பது, இந்தக் கொடுமைகளை எதிர்த்து டி.சி. கேட்போரை வீணாக அலையவைத்து அவமதிப்பதும் அபராதம் விதித்து அதனை வசூலிப்பது இவர்களது வாடிக்கையாகும். இதுபோன்ற நிர்வாகச் சீர்கேடுகள், முறைகள் ஒழுக்கக்குறைவான நிகழ்வுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய திருவண்ணாமலை இன்ஸ்பெக்டர் ஆப் மெட்ரிகுலேசன் ஸ்கூல் அதிகாரிகள் முறையாக, இப்பள்ளியின் பிரச்னைகளை எள்ளளவும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதால் மதிப்பற்ற மாணவர்களின் உயிர்களை பலி கொடுப்பதற்கு அதிகாரிகளே துணையாக இருக்கின்றனர். 

எனவேதான் 2003ல் ஜனவரியில் பள்ளி வேன் அம்மகளத்தூர் மாணவர்களை ஏற்றிச்சென்று மோதிய விபத்தில் பல மாணவர்கள் பலத்த காயமடைந்து நினைவிழக்கச் செய்தது. 2004ல் ஜூன் மாதம் 7 ஆம் வகுப்பு படித்த பள்ளி மாணவன் ஆர். ராஜாவை படுகொலை செய்தது. 16.7.2004ல் கும்பகோணம் விபத்திற்குப் பிறகு, சுவர் இடிந்து விழுந்து பல மாணவர்களின் கால்களை ஊனமாக்கியது. 2004ல் ஜூலையில் 7 ஆம் வகுப்பு மாணவன் ராஜா ஆசிரியையின் துன்புறுத்தலால் மனமுடைந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு தூண்டியதால் லட்சக்கணக்கில் செலவு செய்தும் வாய் பேச முடியாததால் மனநிலை பாதித்தார். 

தற்போது 08.12.2005 அன்று நெஞ்சை உலுக்கும் வகையில் பள்ளி வளாகத்திலேயே எல்.கே.ஜி. படிக்கும் எஸ். பிரதிக்ஷா என்ற 4 வயது சிறுமியை வாகனத்தை விட்டு ஏற்றி, விபத்து என்ற பெயரில் ரத்த காவு கொடுத்தது. இப்படி கசப்பான சம்பவங்கள் பல நடந்தும் ஐ.எம்.எஸ். வாய் திறக்காததால் இதயமே இல்லாத பள்ளி நிர்வாகம் மாநிலத்தில் முதல் இடம் பெற வேண்டி நடைபெற்ற யாக பூஜையின் பலனாய் மாணவர்களை நரபலி தரவேண்டி சாமியார்கள் எத்தணித்துக் கூறும் மூடநம்பிக்கையைதான் இப்படி நிறைவேற்றி வருகிறது என்று பொதுமக்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். 

நேற்று ராஜா! இன்று பிரதிக்ஷா! நாளை யாரோ? எனத் தெரியவில்லை. இப்படி கொலை வெறிச் சிந்தனையும் மூட நம்பிக்கையால் காவு வாங்கும் கொலைக்களமாகவும் அரசின் விதிமுறைகளை மீறியுள்ள இப்பள்ளியின் அங்கீகாரத்தை உடனே ரத்து செய்யக்கோரி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அணி திரள்வீர்! 

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com