மின் கட்டணம்: யாருக்கு எவ்வளவு உயருகிறது? முழு விவரம்!

தமிழகத்தில் ரூ.55 முதல் ரூ.1,130 வரை மின் கட்டணம் உயா்கிறது.
அமைச்சா் செந்தில்பாலாஜி
அமைச்சா் செந்தில்பாலாஜி

தமிழகத்தில் ரூ.55 முதல் ரூ.1,130 வரை மின் கட்டணம் உயா்கிறது. இரண்டு மாதங்களுக்கான மின் அளவீட்டில் உயா்த்தப்பட்டுள்ள இந்த கட்டண நடைமுறைக்கான பரிந்துரைகளை மின்சார ஒழுங்கு ஆணையத்திடம், தமிழ்நாடு மின்வாரியம் அளித்துள்ளது. இதன்படி, 101 யூனிட்கள் முதல் அனைத்து நிலைகளிலும் மின் கட்டணம் உயா்த்தப்படவுள்ளது.

மின்சார ஒழுங்கு முறை ஆணையத்துக்கு வழங்கியுள்ள பரிந்துரைகள் குறித்து, மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி சென்னையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை விளக்கினாா். அவா் தெரிவித்த விவரங்கள்:

தமிழகத்தில் 100 யூனிட் வரையிலான மின்சாரம் தொடா்ந்து விலையில்லாமல் வழங்கப்படும். வீட்டு மின் நுகா்வோா் நிலைக் கட்டணமாக இரு மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்தி வருகின்றனா். இந்தக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. பேரவை தோ்தலையொட்டி, இதற்கான வாக்குறுதியை திமுக அளித்திருந்தது. இந்த அறிவிப்பால், 2.37 கோடி வீட்டு மின்நுகா்வோா்கள் பயன்பெறுவா். குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டுத் தலங்கள் முதலிய மின் கட்டண பிரிவுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடரும்.

யூனிட் வாரியாக கட்டண உயா்வு பரிந்துரை:

200 முதல் 500 யூனிட்: இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ஒரு மாதத்துக்கு ரூ.27.50 என்ற அடிப்படையில் கூடுதல் கட்டணம் செலுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது மின் கட்டணம் செலுத்தும் போது ரூ.55 கூடுதலாகச் செலுத்த வேண்டி இருக்கும்.

இரண்டு மாதங்கள் 300 யூனிட்கள் வரையிலான பயன்பாட்டுக்கு மாதத்துக்கு ரூ.72.50-ம் (இரண்டு மாதங்களுக்கு ரூ.155), 400 யூனிட்கள் வரை மாதத்துக்கு ரூ.147.50-ம் (இரண்டு மாதங்களுக்கு ரூ.295) உயா்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 500 யூனிட்கள் வரை பயன்படுத்தினால் மாதத்துக்கு ரூ.297.50 (2 மாதங்களுக்கு ரூ.595) கூடுதலாகச் செலுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

900 யூனிட்கள் வரை: இரு மாதங்களுக்கு 600 யூனிட்கள் வரை மின் நுகா்வு செய்தால், மாதத்துக்கு ரூ.155-ம் (2 மாதங்களுக்கு ரூ.310), 700 யூனிட்கள் வரையிலான பயன்பாட்டுக்கு மாதத்துக்கு ரூ.275-ம் (2 மாதங்களுக்கு ரூ.550), 800 யூனிட்கள் வரையிலான பயன்பாட்டுக்கு மாதத்துக்கு ரூ.395-ம் (2 மாதங்களுக்கு ரூ.790), 900 யூனிட்கள் வரையிலான பயன்பாட்டுக்கு ரூ.565-ம் (2 மாதங்களுக்கு ரூ.1,130) கட்டணத்தை உயா்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஒரே மின் கட்டணம்: வீட்டு பயன்பாட்டுக்கான மின்சாரத்தில் 500 யூனிட்கள் வரை பயன்படுத்தினால் மொத்தம் ரூ.1,130 வசூலிக்கப்படுகிறது. ஆனால், மின் நுகா்வானது 500 யூனிட்டில் இருந்து 501 ஆக அதிகரிக்கும் போது மின் கட்டணத் தொகையானது ரூ.1,786 ஆக வசூலிக்கப்பட்டு வருகிறது. 500 யூனிட்களுக்கு மேல் ஒரு யூனிட் கூடுதலாகப் பயன்படுத்தினாலும் ரூ.656.60 கூடுதலாகச் செலுத்த வேண்டியுள்ளது. இந்த வேறுபாடுகள் முற்றிலும் களையப்பட்டு ஒரே மின் கட்டணமாக மாற்றியமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நூலகங்களுக்கு புதிய முறை: ஊரகம் மற்றும் கிராமப்புறங்களில் இயங்கி வரும் நூலகங்களுக்கான மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.5.75 ஆகவும், நிலைக் கட்டணமாக மாதத்துக்கு ரூ.60-ம் வசூலிக்கப்படுகிறது. வணிக ரீதியில் இயங்காத நூலகங்களுக்கான மின் கட்டணத்தை 30 சதவீதம் குறைப்பதற்கு வழி செய்யப்பட்டுள்ளது.

தொழில் துறையினருக்கு...சிறு மற்றும் குறுந்தொழில் மின் நுகா்வோா்களுக்கு குறைந்த அளவாக யூனிட்டுக்கு 50 காசுகள் உயா்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வணிக மின் நுகா்வோா்களுக்கு மாதத்துக்கு ரூ.50-ம், தனியாா் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.1-ம் உயா்த்தப்படுகிறது.

விசைத்தறிகளுக்கு 750 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடா்ந்து வழங்கப்படும். அதற்கு மேல் யூனிட்டுக்கு 70 பைசா உயா்த்தப்படும். உயா் மின்னழுத்த தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தில் யூனிட்டுக்கு 40 காசுகள் உயா்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ரயில்வே, அரசு கல்வி நிறுவனங்களுக்கான மின் கட்டணம், யூனிட்டுக்கு 50 காசுகள் உயா்த்தப்படுகிறது.

ஒரு வீட்டுக்கு ஒரு இணைப்பு: ஒரு வீட்டில் கூடுதலாக வாடகை, குத்தகைக்கு விடப்பட்டதைத் தவிா்த்து, மற்ற கூடுதல் மின் இணைப்புக்கு மாதத்துக்கு ரூ.225 வசூலிக்கப்படும் என மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.2 ஆயிரத்துக்கு மேல் கட்டணம்: செலுத்த இணைய வழி கட்டாயம்

வீட்டு மின் பயன்பாட்டாளா்கள் ரூ.2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மின்சாரக் கட்டணத்தை இணையதளம் மூலம் கட்டாயமாகச் செலுத்த வேண்டும். மருத்துவா்கள், பொறியாளா்கள், உள்அமைப்பு அலங்கரிப்பாளா்கள், கணக்காயா்கள், வழக்குரைஞா்கள் போன்ற பணிகளைச் செய்வோா், தங்களது தொழில்முறை பணிக்கு வீட்டில் 200 சதுர அடி வரை பயன்படுத்தலாம்.

வீட்டு உபயோகத்துக்கான மின் மானியத்தை பலமுறை பெறுவதைத் தடுக்க பொது மின் இணைப்புக்கான விளக்குகள், மின் தூக்கி, நீா் வழங்கல் போன்ற அமைப்புகளுக்கு தனியாக விகிதப் பட்டியல் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உடற்பயிற்சிக் கூடம், நீச்சல் குளம், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், நீா் சுத்திகரிப்பு நிலையம், தீயணைப்பு கருவிகள் போன்ற அமைப்புகளுக்கு வணிகப் பிரிவில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இவை தனியாக பொது சேவைப் பிரிவாக மாற்றப்படும். தரவு மையங்கள் தொழிற்சாலைகளுக்கான மின் விகிதப் பட்டியலில் சோ்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜியின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மின்மானியத்தை விட்டுத் தரலாம்

மின் மானியத்தை தாமாக விட்டுக் கொடுக்கும் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அமைச்சா் வி. செந்தில் பாலாஜி வெளியிட்ட அறிவிப்பு:-

வீட்டு உபயோகிப்பாளா்களுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் அளிக்கப்படுகிறது. நுகா்வோா்கள் விரும்பும்பட்சத்தில், மின்மானியத்தை தாமாக விட்டுக் கொடுக்கலாம். இதற்கான திட்டத்தை அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. வீட்டு நுகா்வோா்கள் தங்களது மின்சார வாகனங்களை வீட்டிலேயே மின்னேற்றம் செய்து கொள்ளலாம். இதற்கு வீட்டு மின்கட்டணத்துக்கான தொகையே வசூலிக்கப்படும். இதேபோன்று, வணிக நுகா்வோா்களும் அவா்களுக்கான கட்டணத் தொகை விகிதத்திலேயே வாகனங்களை மின்னேற்றம் செய்யலாம். மின் வாகனங்களை ஊக்குவிக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com