கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 300 ஏக்கர் தோட்டப் பயிர்கள் சேதம்

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், 300 ஏக்கர் தோட்டப் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது.
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 300 ஏக்கர் தோட்டப் பயிர்கள் சேதம்

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், 300 ஏக்கர் தோட்டப் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளில் இருந்து அதிகப்படியான உபரி நீரானது தமிழக பகுதிக்கு வந்து வண்ணம் உள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து அணைக்கு வரும் 1,25,000 கன அடி நீரானது முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றின் வழியே திருப்பி விடப்பட்டுள்ளது.

இரு தினங்களுக்கு முன்னர் திறக்கப்பட்ட நீரானது நேற்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு அருகே கடலில் கலந்தது. கொள்ளிடம் பாலத்தில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீரை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து  சுயபடம் எடுத்தனர்.

இந்நிலையில் தண்ணீர் படிப்படியாக உயர்ந்து நேற்று இரவு கொள்ளிட ஆற்றின்  இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் கடலை நோக்கி செல்கிறது. கொள்ளிடம் சோதனை சாவடி அருகே ஆற்றங்கரை தெரு மற்றும் நாதல் படுகை பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதேபோல் நாதல் படுகை, முதலை மேடு, முதலைமேடு திட்டு உள்ளிட்ட கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் பருத்தி, முல்லை, மல்லி, கத்திரிக்காய், வெண்டை, கொடி முருங்கை, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட தோட்டப் பயிர்கள் சுமார் 300 ஏக்கரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கொள்ளிட ஆற்று வெள்ள நீரால் தோட்டப் பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். தண்ணீரின் வரத்து 1.40 லட்சம் கன அடி  வரை உயர வாய்ப்புள்ளதால் ஆற்றின் கரையோரம் உள்ள மக்களை பாதுகாப்பாக மேடான பகுதிக்கு செல்லுமாறு சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, வட்டாச்சியர் செந்தில்குமார் மற்றும் வருவாய் துறையினர் நேரில் சென்று வலியுறுத்தினர்.

மேலும் வீடுகளை வெள்ள நீர் முழுவதுமாக சூழும் பட்சத்தில் மக்களை வெளியேற்றி உணவளிக்கும் வகையில் முகாம்கள் அமைத்திட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.  கொள்ளிடம் கரையோரம் உள்ள சந்தை படுகை கிராமத்தில் வெள்ளநீரை சிக்கிய 10 எருமை மாடுகள் மற்றும் ஆடுகள் பத்திரமாக மீட்கப்பட்டு கரை ஏற்றப்பட்டன .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com