வரும் தேர்தல்களில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: முன்னாள் அமைச்சர் தங்கமணி

வரவுள்ள தேர்தல்களில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று திருச்சியில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார்.
முன்னாள் அமைச்சர் தங்கமணி
முன்னாள் அமைச்சர் தங்கமணி

திருச்சி: வரவுள்ள தேர்தல்களில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று திருச்சியில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார்.

திமுக அரசின் சொத்துவரி உயர்வு, குடிநீர் கட்டணம் உயர்வு, மின் கட்டணம் உயர்வை கண்டித்து திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக சார்பில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மேல சிந்தாமணி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  
மாநகர அவைத்தலைவர் மலைக்கோட்டை ஐயப்பன் தலைமை வகித்தார். ஆவின் தலைவர், கார்த்திகேயன் வரவேற்றார். மாநில அமைப்பு செயலாளர் ரத்தினவேல், எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் சீனிவாசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி  கலந்து கொண்டு அவர் மேலும் பேசியது: 
திமுக அரசு பொறுப்பேற்று 14 மாதங்கள் ஆன நிலையில் தேர்தல் வாக்குறுதியில் கூறிய திட்டங்களை நிறைவேற்ற வில்லை. குறிப்பாக மக்களுக்கு நன்மை செய்யாமல் சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை உயர்த்தி இந்த அரசு மக்கள் மீது அக்கறை இல்லாத அரசு என்பதை காட்டுகிறது.

ஆனால் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் ஆட்சி ஏழை, எளிய சாமானிய மக்களின் ஆட்சியாக இருந்தது.

கடந்த 10 ஆண்டுகளில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால் திமுக அரசு ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில் மின் கட்டணம், சொத்து வரி குடிநீர் கட்டணம் போன்றவற்றை உயர்த்தி மக்களுக்கு தொல்லை கொடுக்கும் அரசாக இருந்து வருகிறது.

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்தது. ஆனால் மு க ஸ்டாலின் ஆட்சியில் மின் தட்டுப்பாடு உள்ள மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அரசு தேர்தல்  நேரத்தில், பொய்யான வாக்குறுதிகளை கூறி  ஆட்சிக்கு வந்துள்ளது. பொதுமக்கள் திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று எண்ணி வாக்களித்த நிலையில் மக்களை ஏமாற்றும் வகையில் திமுக அரசு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. 
 
எனவே வருகின்ற மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் திமுக அரசுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் ஜாக்குலின், வனிதா,கே.சி. பரமசிவம் ,பத்மநாதன், வக்கீல் ராஜ்குமார்,எம்ஜிஆர் இளைஞர் அணி முத்துக்குமார், இலியாஸ், ராஜேந்திரன், நடராஜன், அப்பாஸ்,சகாபுதீன், அழகரசன்,வெல்ல மண்டி பெருமாள், முன்னாள் துணை மேயர் மரியம் ஆசிக், இப்ராம்ஷா, வசந்தம் செல்வமணி, தலைமை கழக பேச்சாளர் ஆரி, சிவசுப்பிரமணியன்,  வக்கீல்கள் கங்கை செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com