பாம்பு கடித்து சிறுமி பலி? விசாரணையில் மிகப்பெரிய திருப்பம்

13 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய 78 வயது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆனால், அந்தச் சிறுமி பாம்பு கடித்து இறந்தபிறகுதான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பாம்பு கடித்து சிறுமி பலி? விசாரணையில் மிகப்பெரிய திருப்பம்
பாம்பு கடித்து சிறுமி பலி? விசாரணையில் மிகப்பெரிய திருப்பம்


சென்னை: 13 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய 78 வயது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆனால், அந்தச் சிறுமி பாம்பு கடித்து இறந்தபிறகுதான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்தில் பாம்பு கடித்து ஒரு சிறுமி பலியானதாகக் கூறப்படுகிறது. இதில், அந்தச் சிறுமியை மூன்று மாதங்களுக்கு முன்பு, வயதான நபர் பாலியல் பலாத்காரம் செய்த விடியோ ஒன்று நேற்று சமூக வலைத்தளங்களில் பரவியதன் மூலம் விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

மூன்று மாதங்களுக்கு முன்பு, அச்சிறுமிக்கு இந்த துயரம் நடக்கும் போது, அதனைப் பார்த்த பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அந்த நபருக்குத் தெரியாமல் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்வதை விடியோ பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் சிறுமி மரணமடைந்ததால், இனி அந்த விடியோவை வெளியிட்டால் யாருக்கும் பாதிப்பிருக்காது என்று கருதி, அவர்கள் எடுத்த விடியோவை தங்களது நண்பர்களுக்குள் பரப்பியுள்ளனர்.

இது குறித்து அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிலர் கொடுத்த புகாரின் பேரில், உடனடியாக அந்த இளைஞர் மற்றும் அவரது நண்பர்களை காவலில் எடுத்த காவல்துறையினர், அந்த 78 வயது நபரையும் கைது செய்தனர். சிறுமிக்கு 5 வயதாக இருக்கும் போதே அவரது பெற்றோரை இழந்து, உறவினர் வீட்டில் வசித்து வந்ததும், உறவினர், செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

ஞாயிற்றுக்கிழமை சிறுமியை பாம்பு கடித்து ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பலியாகியுள்ளார். திங்கள்கிழமை மாலையே சிறுமியின் இறுதிச் சடங்குகள் நடந்த நிலையில், அன்று இரவு அந்த விடியோவை இளைஞர்கள் பல்வேறு வாட்ஸ் ஆப் குழுக்களில் பரப்பியுள்ளனர். 

தவறான விடியோவை சமூக வலைத்தளத்தில் பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் 5 இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையினர், சிறுமியின் மரணத்துக்கு பாம்பு கடித்ததுதான் காரணம் என்றும் கூறியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com