மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம்: கொலையா? தற்கொலையா?

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமாக உயிரிழந்தது தொடர்பாக பள்ளி தாளாளர், ஆசிரியர்கள் உள்பட 5 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் புதன்கிழமை பிற்பகல்
மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம்: கொலையா? தற்கொலையா?

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமாக உயிரிழந்தது தொடர்பாக பள்ளி தாளாளர், ஆசிரியர்கள் உள்பட 5 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் புதன்கிழமை பிற்பகல் விசாரணையைத் தொடங்கினர். இந்த விசாரணையில் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? கொலை செய்யப்பட்டாரா? நடந்தது என்ன? போன்ற  கேள்விகளுக்கு விடை தெரிய வாய்ப்புள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி(17) மர்மமான முறையில் கடந்த 13 -ஆம் தேதி பள்ளியில் உயிரிழந்து கிடந்தார். இது குறித்து மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரில் சின்னசேலம் காவல்துறையினர் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸார் ஒப்படைக்கப்பட்டது‌.

பின்னர் இந்த வழக்கு தற்கொலைக்கு தூண்டியதாக மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், பள்ளி வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, பள்ளி கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

மாணவி உயிரிழப்பை தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியதால் இவ்வழக்கு தமிழக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மாணவி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையிலிருக்கும் பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், பள்ளி வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, பள்ளி கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் தலைமை குற்றவியல்  நீதிமன்றத்தில் நீதிபதி மன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தனர்.

இதையும் படிக்க: கனியாமூர் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்
 
இதையடுத்து இந்த மனு நீதிபதி புஷ்பராணி முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இதற்காக சேலம் சிறையில் இருந்து கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், பள்ளி வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, பள்ளி கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விழுப்புரம் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது இந்த மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பராணி,  வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், ஆசிரியர்கள் 2 பேர் என மொத்தம் 5 பேரையும் சிபிசிஐடி போலீஸார் ஒரு காவல் காவல் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

மேலும், விசாரணைக்குப் பிறகு வியாழக்கிழமை பிற்பகல் 12.30 க்கு மணிக்கு அவர்கள் 5 பேரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.

பின்னர், நீதிமன்றத்தில் இருந்து பள்ளி தாளாளர் உள்பட 5 பேரும் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு  அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்‌. பின்னர், விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு பள்ளி தாளாளர் உள்பட 5 பேரும் பிற்பகல் 1.30 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.

அங்கு பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், பள்ளி வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, பள்ளி கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கினர்.


 
சிபிசிஐடி போலீஸாரின் தீவிர விசாரணையில் மாணவி ஸ்ரீமதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? அங்கு நடந்தது என்ன?  போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரிய வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com