'என்எல்சி பொறியாளர் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இல்லை'

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனம் புதிதாக தேர்வு செய்துள்ள பொறியாளர்கள் 299 பேரில் ஒருவர் கூட தமிழகத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பதால் தமிழர்களை புறக்கணிக்கும் செயல் என ஏ.அருண்மொழிதேவன்  எம்எல்ஏ
'என்எல்சி பொறியாளர் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இல்லை'


சிதம்பரம்: கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனம் புதிதாக தேர்வு செய்துள்ள பொறியாளர்கள் 299 பேரில் ஒருவர் கூட தமிழகத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பதால் தமிழர்களை புறக்கணிக்கும் செயல் என முன்னாள் மக்களவை உறுப்பினரும், கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், புவனகிரி சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.அருண்மொழிதேவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புவனகிரி தொகுதிக்குட்பட்ட என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் பொறியியல் படித்த பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கி அதனைத் தொடர்ந்து நேர்முகத்தேர்வையும் நடத்தி முடித்திருக்கிறது. வரும் 2022 ஆகஸ்ட் 1-ஆம் தேதி அன்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் மருத்துவ பரிசோதனையும் நடைபெற இருப்பதாக என்.எல்.சி நிர்வாகம் அறிவித்திருக்கிறது. 

மேற்கண்ட வேலைவாய்ப்பிற்காக தேர்வு செய்யப்பட்ட பட்டியலை கடந்த 2022 ஜூலை 19 ஆம் தேதி என்.எல்.சி நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அந்தப்பட்டியலில் உள்ள மொத்தமுள்ள 299 நபர்களில் ஒருவர்கூட தமிழகத்தைச் சேர்ந்தவர் இடம் பெறவில்லை. 

ஏ.​அருண்மொழிதேவன் எம்எல்ஏ

ஆண்டுதோறும் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற தேர்வுகளிலும், இந்திய அளவில் நடைபெறுகின்ற பல போட்டித் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று தேர்வாகிறார்கள். ஆனால் என்.எல்.சி நிறுவனத்தால் நடத்தப்படுகின்ற போட்டி தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. எனவே. என்.எல்.சி நிறுவனத்தால் நடத்தப்படுகின்ற தேர்வுகள் குறித்து பலத்த சந்தேகம் எழுகிறது என்பது உண்மை. 

தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டப்படிப்பு படித்த பொறியியல் பட்டதாரிகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இடம் பெறாதது கண்டனத்துக்குரியது.

குறிப்பாக என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சுரங்க விரிவாக்க பணிகளுக்கு நிலம், வீடு கொடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாரிசுகள் பொறியாளர் படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று இருந்தும், என்.எல்.சி. இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் இடம் பெறாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு ஏற்படுத்துகிறது. 

என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் விரிவாக்கப்பணிகளுக்கு எடுக்கப்பட்ட நிலங்கள் மற்றும் எதிர்கால மூன்றாவது சுரங்க விரிவாக்கத்திற்கு எடுக்க இருப்பதாக சொல்லப்பட்டுள்ள நிலங்கள் என் தொகுதிக்கு உள்பட்டவையாகும். அம் மக்கள் என்.எல்.சி நிறுவனத்தை எதிர்த்து தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நாள்தோறும் போராடிக் கொண்டுள்ளார்கள். எந்தவொரு நிரந்தர வேலை வாய்ப்பையோ, உரிய இழப்பீட்டையோ வழங்காத என்.எல்.சி இந்தியா நிறுவனம் மண்ணின் மைந்தர்களை தொடர்ந்து புறக்கணித்து வருவது தமிழர்களையும் தமிழர்களின் உணர்வையும் கிள்ளுக்கீரையாக நிறுவனம் எண்ணிவருவதையே பிரதிபலிக்கிறது.

இதேபோல் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் பல ஆண்டுகளாக நிறுவனத்திற்காக பாடுபட்டு நிறுவனத்தை "நவரத்னா" என்ற உயர்ந்த அந்தஸ்த்துக்கு கொண்டு சென்றுள்ள தொழிலாளர்களின் வாரிசுகள், பொறியாளர் படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று இருக்கக்கூடியவர்களை வேலைக்கு தேர்வு செய்யாமல் வட இந்தியாவில் இருந்து எடுக்க வேண்டிய நோக்கமும் அவசியமும் ஏன்? அதோடு நிலம் வீடு கொடுத்த விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது எந்த வகையில் நியாயமானதாக இருக்கும். ஆகையால் நிர்வாகத்தின் செயல் கடுமையாக கண்டிக்கக்கூடிய கண்டனத்துக்குரிய செயலாகும். 

காலியாக உள்ள வேலை வாய்ப்பினை முழுமையாக நிலம்,வீடு கொடுத்தவர்களுக்கும்,என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களின் வாரிசுகளுக்கும் முன்னுரிமை அளித்துகொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். 

ஆகையால் என்.எல்.சி. நிறுவனம் பொறியாளர் வேலைவாய்ப்பில் நடந்து முடிந்த நேர்முகத்தேர்வை ரத்து செய்தும் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடக்க உள்ள ஆவண சரிபார்ப்புக்கு பிறகு மருத்துவ பரிசோதனையை உடனடியாக, ரத்தும் செய்ய வேண்டும்.

இந்த பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழகத்தைச் சேர்ந்த தகுதியுள்ள நிலம் வீடு கொடுத்தவர்களின் வாரிசுகளையும், தொழிலாளர்களின் வாரிசுகளையும் ஒன்றினைத்து, முன்னுரிமை அளித்து புதிய பட்டியலை வெளியிட வேண்டும் என என்.எல்.சி நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறேன். 

கடலூர் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் இந்த பிரச்னையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும். அதோடு சட்டப்பேரவையில் எனது கேள்விக்கு பதிலளித்தவாறு என்.எல்.சி பிரச்னைகளுக்கு தீர்வு காண அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கொண்ட குழுவை தமிழக அரசு உடனே அமைக்க வேண்டும். இந்த பிரச்னை குறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக உரிய நடவடிக்க எடுக்கவில்லையென்றால் தமிழர் விரோத என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தை கண்டித்து தொடர்போராட்டங்களை அதிமுக நடத்தும் என ஏ.அருண்மொழிதேவன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com