
போடி: போடியில் தனியார் தங்கும் விடுதி உரிமையாளரை வெட்டி கொலை செய்த கொலையாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போடியில் சனிக்கிழமை பட்டப்பகலில், ஆள் நடமாட்டம் மிகுந்த தலைமை தபால் நிலையம் அருகே முன்னாள் ராணுவ வீரரும், தனியார் தங்கும் விடுதி உரிமையாளருமான ராதாகிருஷ்ணன் (71) என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
கொலையாளிகள் ஜீப்பில் தப்பி விட்டனர். போடி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் பட்டப்பகலில் சம்பவம் நடந்து 24 மணி நேரத்தை கடந்தும் குற்றவாளிகளை போலீசார் கைது செய்யாததைக் கண்டித்து ராதாகிருஷ்ணனின் உறவினர்கள் போடி பழைய பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதனால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த டி. எஸ்.பி சுரேஷ் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானபடுத்தி அனுப்பி வைத்தனர்.