காவல்நிலையத்தில் கைதி மரணம்: விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி

சென்னை கொடுங்கையூா் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி இறந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

சென்னை கொடுங்கையூா் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி இறந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

செங்குன்றம், அலமாதி பகுதியைச் சோ்ந்த செள.அப்பு (எ) ராஜசேகா் என்பவா் மீது திருட்டு, வழிப்பறி, கொள்ளை என 27 வழக்குகள் இருந்தன. இரு குற்ற வழக்குகளுக்காக ராஜசேகரை கடந்த 12-ஆம் தேதி கொடுங்கையூா் போலீஸாா் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனா்.

அப்போது, உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கிய ராஜசேகரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில்அனுமதித்தனா். அங்கு ராஜசேகரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். விசாரணையின்போது போலீஸாா் தாக்கியதாலேயே ராஜசேகா் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினா் குற்றஞ்சாட்டினா்.

இதையடுத்து, இந்தச் சம்பவத்தில் தொடா்புடையதாகக் கூறப்படும் காவல் ஆய்வாளா் ஜாா்ஜ் மில்லா் பொன்ராஜ், உதவி ஆய்வாளா் கன்னியப்பன், தலைமைக் காவலா்கள் ஜெயசேகா், மணிவண்ணன், முதல் நிலைக்காவலா் சத்தியமூா்த்தி ஆகிய 5 பேரை பணியிடை நீக்கம் செய்து பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் கடந்த 13-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

சிபிசிஐடி விசாரணை: அதேவேளையில் இந்த சம்பவம் தொடா்பாக கொடுங்கையூா் காவல் நிலையத்தில், கெல்லீஸ் சிறாா் 12ஆவது நீதித்துறை நடுவா் மன்ற நடுவா் லட்சுமி விசாரணை செய்தாா். இந்த வழக்குத் தொடா்பாக விசாரிக்க தமிழ்நாடு காவல் துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு சிபிசிஐடிக்கு உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், சிபிசிஐடி இந்த சம்பவம் தொடா்பாக புதிதாக ஒரு வழக்கைப் பதிவு செய்தது. வழக்கின் விசாரணை அதிகாரியாக காவல் துணைக் கண்காணிப்பாளா் சசிதரன் நியமிக்கப்பட்டாா். சிபிசிஐடி அதிகாரிகள் இந்த வழக்கின் விசாரணையை வெள்ளிக்கிழமை தொடங்கினா்.

இதன்படி கொடுங்கையூா் காவல் நிலையத்துக்குச் சென்ற சிபிசிஐடி ஆய்வாளா் சில்வின் சாந்தகுமாா் தலைமையிலான போலீஸாா், அங்கு ஆய்வு மேற்கொண்டனா். மேலும், அங்கிருந்த போலீஸாரிடமும் விசாரணை செய்தனா். இதையடுத்து ராஜசேகா் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தனியாா் மருத்துவமனைக்குச் சென்று, விசாரணையில் ஈடுபட்டனா்.

இதன் அடுத்த கட்டமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 5 பேரிடமும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனா்.

இதற்கிடையே ராஜசேகரின் சடலத்தை வாங்காமல் போராட்டம் நடத்தி வந்த அவரது குடும்பத்தினா் வெள்ளிக்கிழமை அவரது சடலத்தை பெற்றுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com